இலங்கை செய்திகள்

ஜனாதிபதியை இலக்கு வைத்தே தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது - தயாசிறி ஜயசேகர

12 Jun 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்குவைத்து, அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலேயே நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சுமத்தியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதால், தெரிவுக்குழு அது தொடர்பில் விசாரணைச் செய்யும் அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

​மேலும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒரு நாடகமென விமர்சித்துள்ள அக்கட்சி, நாட்டின் தேசியப் பாதுகாப்போடு நாடகமாட வேண்டாமெனவும் கடுமையாக எச்சரித்துள்ளதோடு, நாடாளுமன்ற தெரிவுக்குழு நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு முரணாக செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகரவே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்த அவர், தெரிவுக்குழுவின் உறுப்பினர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜயம்பதி விக்ரமரத்ன, ஆசுமாரசிங்க ஆகியோர் தேசியப் பட்டியலூடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டனர் என்றார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன் சாட்சியமளிக்கும் தேசிய புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமெனவும் எச்சரித்த அவர், புலனாய்வுத் பிரிவுத் தொடர்பான முக்கியமான தகவல்கள் ஊடகங்களுடாக வெளிப்படுத்தப்படுவதாகவும் இதனால், இலங்கையின் புலனாய்ப் பிரிவுத் தொடர்பான தகவல்களை பயங்கரவாதிகள் அறிந்துக்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் தாக்குதல்கள் நடைபெறும்போது, தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ், நான்கு நாள்களுக்கு ஏன் வெளிநாடுக்கு சென்றிருந்தார் என வினவிய அவர், தெரிவுக்குழுவும் இது தொடர்பில் அவரிடம் வினவ வேண்டுமெனவும் கேட்டுகொண்டார்.

தாக்குதல்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ அறிந்திருந்தும் அது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரிவிக்கவில்லை எனவும், பாதுகாப்புச் செயலாளரால், ஜனாதிபதியில்லாது பாதுகாப்புச் சபைக் கூட்டத்தைக் கூட்டியிருக்க முடியுமெனவும் கூறினார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் அறிந்து வைத்துள்ளார்களா என தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் எவரும் கேள்வி எழுப்புவதில்லை எனக் குற்றஞ்சுமத்தியதோடு, தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியது அரசாங்கமே தவிர, ஜனாதிபதியல்லவெனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டிருப்பதால், அவசரக்கால நிலைமை தொடர வேண்டிய தேவையில்லை என பாதுகாப்புப் பிரிவினர்கள் கேட்டுகொண்டால், நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரக்கால நிலைமை நீக்கப்படுமெனவும் அவர் இதன்போது எடுத்துரைத்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்