இலங்கை செய்திகள்

ஜனநாயக விழுமியம் எனும் போர்வையில் தொடர்ந்து தமிழர்கள் அடக்கப்படுகின்றனர் - தவராசா

11 Jan 2019

அரசாங்கம் ஜனநாயக விழுமியம் எனும் போர்வையில் தொடர்ந்து தமிழர்களின் உரிமைகளை அடக்கி ஆளுவதாக வட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா குற்றம் சுமத்தியுள்ளார்.

உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவுதினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் நேற்று வியாழக்கிழமை அனுஷ்ட்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் உரையாற்றிய அவர், “அரசின் ஏவலில் இடம்பெற்ற படுகொலையே இப்படுகொலையாகும். ஆயுத போராட்டம் எழுச்சி பெற உந்து காரணியாக இருந்தது. இந்த படுகொலை தற்பொழுது ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையிலும் எங்களை அரசாங்கம் அடக்கி ஆளுகின்றது.

ஒரு காலத்தில் பிரித்தானியர்கள் ஆயுதங்களால் இந்த உலகத்தை அடக்கி ஆட்சி செய்தார்கள் எனக் கூறினார்கள். ஆனால் இன்று ஆயுதம் இல்லாமல் வேறுவிதமாக அடக்கி ஆளுகின்றார்கள்.

அதேபோல தற்பொழுது எமது ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அரசு ஜனநாயக விழுமியம் எனும் போர்வையில் தொடர்ந்து எங்கள் உரிமைகளை அடக்குகின்றன. இந்த நிலையிலிருந்து மீட்சி பெற வேண்டுமாயின் தற்போதைய சூழலுக்கு ஏற்ப எம்மை மாற்றி எமது உரிமைகளை பெற முயற்சிக்க வேண்டும்“  எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்