சினிமா செய்திகள்

சோனியா அகர்வால் வேதனை

14 May 2019

காதல் கொண்டேன் படம் மூலம் அறிமுகமானவர் சோனியா அகர்வால். 7ஜி ரெயின்போ காலனி, மதுர உள்ளிட்ட படங்களில் நடித்தார். இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றார்.

மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த சோனியா அகர்வாலுக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. சமீபத்தில் வெளியான அயோக்யா படத்தில் ஒரு காட்சியில் மட்டும் வந்து சென்றார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

‘தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறேன். சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் பார்க்க சென்று இருந்தேன். அங்கு ரசிகர்கள் என்னை சூழ்ந்துகொண்டனர். இது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆனால் சினிமாத்துறையினர் என்னை ஒரு மும்பை பெண்ணாகவே பார்க்கின்றனர். சிலர் என்னை மும்பைக்கே திருப்பி அனுப்ப முயற்சிக்கின்றனர்.

நான் முதன்மை வேடத்தில் நடித்த ‘தனிமை’ என்ற படம் வெளியானது. படத்தின் தயாரிப்பாளர் அனுபவம் வாய்ந்தவர். இருந்தாலும் அந்த படத்தில் ரிலீசில் சிக்கல் ஏற்பட்டது. தியேட்டர்கள் சரியாக கிடைக்கவில்லை. ஆனால் படத்தின் சிக்கல்களுக்கு நானும் காரணம் என்று கிளப்பிவிட்டார்கள். ‘தனிமை’ நல்ல தரமான கதையம்சம் உள்ள படம்.

இதுபோன்ற கதைகள் எனக்கு அதிகம் வருவதில்லை. எனக்கு இப்போது 36 வயது ஆகிறது. ஒரு பையனுக்கோ சிறுமிக்கோ அம்மாவாக நடிக்க நான் தயார். ஆனால் இயக்குனர்கள் என்னை என் வயதையொத்த ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க கேட்கிறார்கள். இது என்னை எரிச்சலாக்குகிறது.

‘தடம்’ படத்தில் அருண் விஜய்யின் சிறுவயது அம்மாவாக நடித்தேன். அதற்கே முதலில் ஒப்புக் கொள்ளவில்லை. கதையை முழுமையாக கேட்டபிறகு என் வேடத்துக்கான முக்கியத்துவம் கருதி ஒப்புக் கொண்டேன். அயோக்யா விஷாலின் படம். என்னுடைய படம் அல்ல. எனவே ஒரு காட்சியில் வந்து சென்றேன்’.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்