விளையாட்டு செய்திகள்

சோகத்தில் சென்னை ரசிகர்கள்

14 May 2019

பிரிமியர் தொடரின் பைனலில் சென்னை அணி, ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பையிடம் வீழ்ந்து கோப்பையை பறிகொடுத்தது. இதற்கு ‘மிடில்–ஆர்டர்’ சொதப்பல், ‘கேட்ச்’ வாய்ப்பை நழுவவிட்டது, ‘ரன்–அவுட்’ சர்ச்சை, ‘பேட்டிங்’ வரிசையில் மாற்றம் போன்றவை காரணமாக அமைந்தன.

இந்தியாவில், 12வது பிரிமியர் கிரிக்கெட் தொடர் நடந்தது. ஐதராபாத்தில் நடந்த பைனலில் முதலில் ‘பேட்’ செய்த மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. போலார்டு அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். பின் களமிறங்கிய சென்னை அணிக்கு வாட்சன் (80) கைகொடுத்த போதும், 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் மட்டும் எடுத்து, ஒரு ரன்னில் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இதனையடுத்து மும்பை அணி, 4வது முறையாக (2013, 2015, 2017, 2019) கோப்பை வென்று சாதித்தது.

சென்னை அணியின் அதிர்ச்சி தோல்விக்கு சில காரணங்கள்: 

அனுபவம் ஏமாற்றம்: துவக்க வீரர்களான டுபிளசி (29), வாட்சன் (80) சிறப்பாக விளையாடினர். ஆனால் ரெய்னா (8), அம்பதி ராயுடு (1), கேப்டன் தோனி (2), டுவைன் பிராவோ (15) உள்ளிட்ட அனுபவ வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகினர். மிகக் குறைந்த இலக்கை ‘சேஸ்’ செய்த போது இப்படி விக்கெட்டை விரைவில் பறிகொடுத்தது சென்னை அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

ரெய்னா சொதப்பல்: பேட்டிங்கில் ஏமாற்றிய ரெய்னா, ‘பீல்டிங்கில்’ தடுமாறினார். மும்பையின் ஹர்திக் பாண்ட்யா, 4 ரன் எடுத்திருந்த போது ஷர்துல் தாகூர் பந்தில் கொடுத்த ‘கேட்ச்’ வாய்ப்பை நழுவவிட்டார். இதனை பயன்படுவுத்திக் கொண்ட ஹர்திக், 16 ரன் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

ஷர்துல் ஏன்: வாட்சன் ‘அவுட்’ ஆன போது 8வது வீரராக ஷர்துல் தாகூர் களமிறக்கப்பட்டார். வெற்றிக்கு இரண்டு பந்தில், 4 ரன் தேவைப்பட்ட நிலையில், அனுபவ வீரர் ஹர்பஜன் சிங்கை களமிறக்காமல், போதிய ‘பேட்டிங்’ அனுபவம் இல்லாத ஷர்துல் தாகூரை களமிறங்கியது தவறான முடிவாக அமைந்தது.

‘மிடில்–ஆர்டர்’ திணறல்: இந்த சீசனில் சென்னை அணி பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இம்ரான் தாகிர் (26 விக்கெட்), தீபக் சகார் (22), ஹர்பஜன் சிங் (16), ரவிந்திர ஜடேஜா (15), டுவைன் பிராவோ (11) விக்கெட் வேட்டை நடத்தினர். ஆனால் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. டுபிளசி (396 ரன்), வாட்சன் (398), கேப்டன் தோனி (416), ரெய்னா (383) ஓரளவு கைகொடுத்தனர். ஆனால் ‘மிடில்–ஆர்டரில்’ வந்த அம்பதி ராயுடு (282), கேதர் ஜாதவ் (162), ரவிந்திர ஜடேஜா (106) ஏமாற்றினர்.

இதுகுறித்து கேப்டன் தோனி கூறியது: இந்த சீசனில் ஒரு அணியாக எங்களது செயல்பாடு திருப்தி அளித்தது. ஆனால் கடைசி வரை ‘மிடில்–ஆர்டர்’ கைகொடுக்கவில்லை. எங்கள் அணி பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி, விக்கெட் வீழ்த்தினர். பைனலில் இரு அணியினரும் சில தவறுகளை செய்தோம். இருப்பினும் எங்களை விட, ஒரே ஒரு தவறு குறைவாக செய்ததால் மும்பை அணி கோப்பை வென்றது. அடுத்த சீசனுக்கான சென்னை அணியின் திட்டம் குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. விரைவில் இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடர் மீது கவனம் செலுத்த உள்ளேன்.

இவ்வாறு தோனி கூறினார்.

‘வில்லன் டூ ஹீரோ’
பிரிமியர் தொடரின் பைனலில் ஒரு கட்டத்தில் மும்பை அணியின் ‘வில்லனாக’ மலிங்கா இருந்தார். ஒரு சில ‘கேட்ச்’, ‘ரன்–அவுட்’ வாய்ப்புகளை வீணடித்த இவர், 16வது ஓவரில் ஒரு சிக்சர், 3 பவுண்டரி உட்பட 20 ரன் வழங்கினார்.

சென்னையின் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்ட நிலையில், மலிங்கா வீசிய 20வது ஓவரின் முதல் 5 பந்தில், 7 ரன் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட போது ‘யார்க்கர்’ வீசிய இவர், ஷர்துல் தாகூரை எல்.பி.டபிள்யு., முறையில் ‘அவுட்’ செய்து மும்பையின் ‘ஹீரோவாக’ மாறினார்.

பும்ரா–ராகுல் நெருக்கடி
மும்பை அணியின் வெற்றிக்கு பும்ரா, ராகுல் சகார் ஆகியோரது செயல்பாடு முக்கிய காரணம். ‘வேகத்தில்’ மிரட்டிய பும்ரா, 4 ஓவரில், 14 ரன் மட்டும் வழங்கி 2 விக்கெட் வீழ்த்தினார். மறுமுனையில் ‘சுழலில்’ அசத்திய ராகுல் சகார், 4 ஓவரில், 14 ரன் மட்டும் வழங்கி ஒரு விக்கெட் கைப்பற்றினார். இவர்கள் இருவரும் இணைந்து 8 ஓவரில், 28 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தனர். இது, சென்னை அணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியாக அமைந்தது.

ஒரு ரன் = ரூ. 7.5 கோடி
பைனலில் வெற்றி பெற்ற மும்பை அணிக்கு கோப்பையுடன் ரூ. 20 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த சென்னை அணிக்கு ரூ. 12.5 கோடி கிடைத்தது. ஒரு ரன்னில் தோல்வியடைந்த சென்னை அணி ரூ. 7.5 கோடியை இழந்துள்ளது.

‘லக்கி டூ அன்லக்கி’
சென்னை அணியின் வாட்சனுக்கு துவக்கத்தில் அதிர்ஷ்டம் கைகொடுத்தது. இவர்,  31, 42, 55 ரன் எடுத்திருந்த போது கொடுத்த ‘கேட்ச்’ வாய்ப்புகளை மும்பை அணியினர் வீணடித்தனர். முக்கியமான நேரத்தில் தேவையில்லாமல் 2வது ரன்னுக்கு ஓடிய இவர் (80 ரன்), ‘ரன்–அவுட்’ ஆனது துரதிருஷ்டமாக அமைந்தது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்