இந்தியா செய்திகள்

சென்னை, புறநகரில் மின்தட்டுப்பாடு அபாயம்

11 Jul 2018

திருவள்ளூர் மாவட்டம் வட சென்னை அனல் மின்நிலையத்தில்  கொதிகலன் பழுது மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக  810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மின்சார தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது.திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வட சென்னை அனல் மின்நிலையத்தில் மொத்தம் 2 நிலைகள் உள்ளது. 1வது நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2வது நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

2வது நிலையில் உள்ள 1வது அலகில் கொதிகலன் குழாயில் பழுது  ஏற்பட்டு பாதிக்கப்பட்டதால் அந்த அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலனில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்யும் பணியில் அனல் மின்நிலைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் அந்த அலகில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனிடையே மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 1வது நிலையில் உள்ள 2வது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. வடசென்னை அனல்மின் நிலையத்தின் மொத்த உற்பத்தி திறனான 1830 மெகாவாட்டில்  தற்போது 810 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மின்சார தட்டுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்