19 Mar 2023
கடந்த 2017-ம் ஆண்டு ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ். அணிகள் இணைந்து நடத்திய பொதுக்குழு கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை நீக்கிய தீர்மானத்தை எதிர்த்து மறைந்த எம்.எல்.ஏ. வெற்றிவேல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதி ராஜீவ் ஷக்தேர் அமர்வில் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.
2021-ம் ஆண்டு டிசம்பர் 7-ந்தேதி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி அ.தி.மு.க. உறுப்பினர் ஜெயச்சந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.
2022-ம் ஆண்டு ஜூன் 23-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தொடர்ந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் அமர்வில் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.
மேலும் அந்த ஆண்டு நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.
இந்த பொதுக்குழுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வெளியான உத்தரவை எதிர்த்து சண்முகம் தாக்கல் செய்த மேம்முறையீட்டு வழக்கு, நீதிபதி துரைசாமி வீட்டில் அவசர வழக்காக 22-ந்தேதி நள்ளிரவில் தொடங்கி, 23-ந்தேதி அதிகாலை வரை விசாரிக்கப்பட்டது.
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்குகள் கோர்ட்டிலும், சில வழக்குகள் கோர்ட்டு நேரம் முடிந்த பின்னர் நீதிபதி வீட்டிலும் விசாரிக்கப்பட்டன. அந்த வரிசையில் தற்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு தொடர்ந்துள்ள வழக்கு, இன்று(ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினத்தன்று அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.