உலகம் செய்திகள்

சூடானில் பெரும் குழப்பம்

14 Apr 2019

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று சூடான். அங்கு கடந்த 1993–ம் ஆண்டு அக்டோபர் 16–ந்தேதி முதல் அதிபர் பதவி வகித்து வந்தவர், உமர் அல் பஷீர் (வயது 75).

இவர் உள்நாட்டுப்போரின்போது, போர்க்குற்றம் செய்ததாக சர்வதேச கோர்ட்டில் வழக்கு பதிவாகி, குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், அந்த நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் முதல் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். அவர் பதவி விலகக்கோரி அங்கு போராட்டங்கள் நடந்து வந்தன.

ஆட்சி கவிழ்ப்பு 

சற்றும் எதிர்பாராத திருப்பமாக அந்த நாட்டின் ராணுவ மந்திரியாக இருந்து வந்த அவாத் இப்ன் ஆப், கடந்த 11–ந்தேதி ராணுவத்தின் உதவியுடன் உமர் அல் பஷீரின் ஆட்சியை கவிழ்த்தார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆட்சியை கவிழ்த்த சூட்டோடு சூடாக அவாத் இப்ன் ஆப், ராணுவ ஆட்சிக்கு பொறுப்பேற்கும் வகையில் ராணுவ கவுன்சில் தலைவராக பதவி ஏற்றார்.

இவர் உள்நாட்டுப்போரின்போது, ராணுவ உளவுத்துறை தலைவர் பதவியும் வகித்தவர் ஆவார். இதையொட்டி அவர் மீது 2007–ம் ஆண்டு அமெரிக்கா பொருளாதார தடையும் விதித்துள்ளது.

ஆட்சியை கவிழ்த்த நிலையில், சர்வதேச கோர்ட்டில் வழக்கு இருந்தாலும், உமர் அல் பஷீர் நாடு கடத்தப்படமாட்டார் என அறிவிக்கப்பட்டது.

2 ஆண்டு ராணுவ ஆட்சி 

அத்துடன் 2 ஆண்டுகள் ராணுவ ஆட்சி தொடரும், அதன்பின்னர்தான் சூடானில் மக்களாட்சியை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் ராணுவ ஆட்சியை மக்கள் ஏற்கவில்லை. பெருமளவில் போராட்டங்கள் நடத்த தொடங்கினர். 2 நாள் போராட்டத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

பதவி விலகினார் 

அடுத்த திருப்பமாக ராணுவ ஆட்சித்தலைவர் அவாத் இப்ன் ஆப் பதவி விலகி விட்டார். இதை அவரே அரசு டி.வி.யில் தோன்றி அறிவித்தார்.

ராணுவ ஆட்சியை லெப்டினன்ட் ஜெனரல் அப்தெல் பட்டா அப்தெல் ரகுமான் புர்ஹான் தலைமை ஏற்று தொடர்ந்து நடத்துவார் என்றும் கூறினார்.

ஆனால் மக்களாட்சியை ஏற்படுத்தாதவரையில், வீதிகளை விட்டு விலக மாட்டோம் என்று போராட்டம் நடத்தி வருகிறவர்கள் கூறுகின்றனர். போராட்டங்களும் வலுத்து வருகின்றன.

இதன் காரணமாக சூடானில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்