இலக்கியம் செய்திகள்

சுடுதண்ணீர் குழாய் சிறுகதை

19 Aug 2016

சிறுகதை

“அண்ணே... எந்திரிண்ணே... விடியப்போவுது..'' கனவில் அழைப்பதுபோல் கேட்டது தங்கையின் குரல்.

 

''அண்ணே... அண்ணே... ஏ... தூங்குமூஞ்சி... 

எந்திரி...'' - தங்கை லட்சுமி அழைத்தது கனவில் இல்லை என்று புரிந்தும், அரை தூக்கத்தில் புரண்டு படுத்தேன். 

''நான் பல்லு வெளக்கிட்டேன்..'' என்று மீண்டும் தங்கையின் தொல்லைக் குரல் இம்சை பண்ண, ''டேய்.. பிரபு.. இன்னும் நீ கௌம்பலையா'' என்று என் நண்பர்களின் குரலும் சேர்ந்து போர்வையையும், தூக்கத்தையும் உதறி எழ வைத்தது. 

வீட்டுக்கு எதிரே உள்ள தண்டவாளத்தில் அந்த அதிகாலை நேரத்திலும்  இரண்டு நண்பர்கள் எனக்காக உட்கார்ந்திருந்தார்கள். தண்டவாளத்தில் கிடந்த கற்களை எடுத்து எறிந்து கொண்டேயிருந்த சப்தம் இன்னும் இரவு மிச்சமிருப்பதை உணர்த்திக் கொண்டிருந்தது. 

பல்பொடியை சுட்டுவிரலில் தொட்டு பற்களில் அழுத்தி தேய்த்தேன். முகம் கழுவினேன். ஐஸ் கட்டியால் அப்பிக்கொண்டதுபோல் முகம் ஜில்லிட்டது. தங்கை, நாலு நண்பர்களுடன் அந்த இருட்டில் நடக்க தொடங்கினோம். 

''பார்த்துப் போயிட்டு வாங்கப்பா'' - அம்மாவின் அக் கறையான குரலுக்கு ''சரிம்மா'' என்று கோரசாக குரல் கொடுத்தபடி, நடையில் வேகம் கூட்டினோம். 

குளிர்.. உடலுக்குள் ஊடுருவி நாடி நரம்பு வரை சில்லிட வைத்துக்கொண்டிருந்தது. உள்ளங்கைகள் இரண்டையும் அழுத்தி சூடு பறக்கத் தேய்த்து குளிருக்கு இதமாய் கன்னத்தில் ஒத்திக் கொண்டோம். 

சில்வண்டுகளின் ரீங்காரம் இன்னும் கேட்டுக் கொண்டேயிருந்தது. கூட்டணி சேர்ந்து விட்டதால் பயமே இல்லாமல் நடைபோட்டோம். பக்கத்து தெருவுக்கு வந்ததும் வள்ளி யும், அவள் தங்கை பாக்கியமும் எங்கள் கூட்டணியில் சேர்ந்து கொண்டனர். வெள்ளையம்மா தெரு தாண்டி நடந்த போது தெரு நாய்கள் குரைக்க, ''எய்.. யாருக்கிட்ட..'' என்றபடி ஒருவன் குனிந்து கல்லெடுக்க, ''அய்யையோ.. அது திமிரு பிடிச்ச நாய்டா.. கடிச்சி வெச்சிடும்..'' என்று தங்கை பதற, ''டேய்.. வேணாண்டா..'' என்று நான் தடுக்க, நண்பன் பெருந்தன்மையுடன் கல்லை கீழே போட்டான். 

''டேய்.. சேகரு.. ஏலேய்..'' என்று கோரசாக கூப்பிட ஏற்கனவே எங்களுக்காக காத்திருந்தவன் ஓடி வந்தான். 

நாங்கள் படிக்கும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியைத் தாண்டி, பழங்காநத்தம் சாவடியை கடந்தோம். தியேட்டர் மெயின்ரோட்டில் நடந்தபோது எங்களைப் போலவே கொத்து, கொத்தாக சிறுவர்கள் சுறுசுறுப்பாய் நடந்து கொண்டிருந்தது தெரிந்தது.  

எங்கள் நடையிலும் வேகம் கூட்டினோம். முக்கு திரும்பியதும், எங்களை வரவேற்றது அந்த சுடுதண்ணீர் குழாய். எங்களுக்குள் உற்சாகம் ஊற்றெடுத்தது. ஏற்கனவே நான்கைந்து பேர் அந்த குளிரில் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தனர். நீளமான அடிபம்பைக் கொண்ட, அந்த ரோட்டோர சுடுதண்ணீர் குழாய் ஊருக்குள் ரொம்பவே பிரபலம். அதிகாலை நான்கு மணியில் இருந்தே அந்த குழாயின் சத்தம் கேட்கத் தொடங்கிவிடும். 

ஆம்.. அதிகாலையில் கோவிலுக்கு செல்பவர்கள் அத்தனை பேரையும் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பாட்டி அனுப்பும் வஞ்சகமில்லாத தாய் அந்த குழாய்! 

ஊருக்குள் எத்தனையோ அடிபம்புக் குழாய்கள் இருந்தாலும் எதிலுமே இப்படியரு வெதுவெதுப்பான தண்ணீர் வந்ததே இல்லை. அதனால்தான் அதற்கு பெயர் சுடுதண்ணீர் குழாய். 

குழாயின் அருகில் வந்ததும், முண்டியடித்துக் கொண்டு ஒவ்வொருவராக வெந்நீரில் தலை நீட்டினோம். மாற்றி மாற்றி ஏதோ சாதிப்பதை போல வயதுக்கு மீறிய பலம் காட்டி எகிறி, எகிறி அந்த அடிபம்பை அடித்தோம். சோப்பு, ஷாம்பு, துண்டு எதுவும் இல்லாத சுகமான குளியல் அது. 

அதுவரை ஐஸ்கட்டி போல் உடலில் ஒட்டிக்கொண்டிருந்த குளிர் எங்கே போனதோ தெரியவில்லை. உற்சாகமாய் குளித்து முடித்து, சட்டையை மட்டும் முறுக்கிப் பிழிந்து உதறி, மீண்டும் போட்டுக் கொண்டு பெருமாள் கோவிலை நோக்கி வீறுநடை போட்டோம். 

பூக்களின் நறுமணமும், அகல் விளக்குகளின் அலங்   காரமும், கூந்தல் விரித்த பெண்களின் கூட்டமுமாய் தேவலோகம் போலத் தோன்றியது, பெருமாள் கோவில். கூடவே பஜனைப் பாடல்களின் பக்தி மணமும்! பள்ளிக் கூடத்தில் வாத்தியார் சொல்லிக் கொடுக்கும் பாடலை புரிந்தும், புரியாமலும் கோரசாக திருப்பிச் சொல்வது போல பஜனைப் பாடலையும் கூட்டத்துடன் சேர்ந்து கோவிந்தா போட்டோம். 

''மார்கழி மாதத்து 31 நாட்களும் தவறாமல் அதிகாலையில் குளித்து ஈர உடையுடன் பெருமாளை வணங்கினால், படிப்பு நன்றாக வரும். பள்ளியில் முதல் மாணவனாக வர முடியும். மனப்பாடம் செய்தது மறக்காமல் இருக்கும்'' என்று பள்ளிக்கூடத்து வாசலில் சோளக்கதிர், ஜவ்வுமிட்டாய் விற்கும் கருப்பாயி பாட்டி சொல்லி வைத்தது வேதவாக்காகிப் போக, பெற்றவர்களும், ''நம்ம பிள்ளைகளுக்கு இந்த சின்ன வயசுலேயே இவ்வளவு பக்தியா...'' என்று உணர்ச்சி வசப்பட்டுத்தான் இப்படி அதிகாலை கூட்டணிக்கு அனுமதித்திருந்தார்கள். 

தீபாராதனை காட்டிய பிறகு ஐயர் வெளியே வந்தார். நாங்கள் அவரை பலாப்பழ ஈக்களாய் மொய்த்துக் கொள்ள, ''அவசரப்படாதீங்கோ.. எல்லோருக்கும் தர்றேன்..'' என்று சூடான பொங்கலை கைகளில்  அள்ளி வைத்தார். நாக்கு சுட்டாலும் பரவாயில்லை என்று வேக வேகமாய் விழுங்கினோம். அந்த அதிகாலைக் குளிரில் சூடான நெய்ப் பொங்கல் தொண்டைக்குள் இறங்கிய சுகமே தனிதான். அப்புறம் சுண்டல். 

 பொழுது லேசாகப் புலர்ந்திருந்தது. வழியில் நின்றிருந்த செடிகளிலும், வாகனங்களிலும் பனித்துளிகள் பூத்துக் கிடந்தன. அவற்றை சிதறியடித்தவாறே பக்கத்து தெருவில் உள்ள கோவிலுக்கு ஓடினோம். 

“சார்.. மாட்டுத்தாவணி.. வந்தாச்சு.. எறங்குங்க..'' என்று கண்டக்டரின் குரல் தூக்கத்தை கலைத்தது. வேலைக்காக சென்னைக்கு வந்து செட்டிலாகிவிட்டவன், பல வருடங்களுக்கு பிறகு மதுரை மண்ணில் கால் வைக்கிறேன். இனம் புரியாத மகிழ்ச்சி. ஊருக்கு வந்ததைவிட, சின்ன வயதில் நடந்ததெல்லாம்.. தங்கர்பச்சான் படத்தை போல மனத்திரையில் விரிந்ததுதான்.. இந்த கூடுதல் மகிழ்ச்சிக்கும், மலர்ச்சிக்கும் காரணம். இந்த சுடுதண்ணீர் குழாய் கண்ணுக்குள்ளே நின்றது. 

''அண்ணே.. ஒரு டீ..'' - சொன்ன வேகத்தில் வந்த ஊர் வாசம் கமழும் டீயை உறிஞ்சிவிட்டு ஆட்டோ பிடித்து வீட்டுக்கு பயணித்தேன். 

அம்மா, அப்பா, தங்கை எல்லோரையும் பார்த்துப் பேசிவிட்டு, என்னைப் பார்க்க வந்த நண்பனின் பைக்கில் தொற்றிக்கொண்டு, தியேட்டர் பக்கம் போகச் சொன்னேன்.

''டேய்.. இப்ப அந்த தியேட்டர் பேரை மாத்திட்டாய்ங்க..” என்றான். 

ஊரே மாறிப் போயிருக்கும்போது அந்த தியேட்டரின் பெயர் மாறாதா என்ன என்று நினைத்துக்கொண்டேன். 

''அங்க யார் வீட்டுக்குடா இவ்வளவு அவசரமா போற. செல்வகுமார பார்க்கவா..'' என்ற நண்பனிடம், ''போடா சொல்றேன்..'' என்றேன். 

ஆவல் உந்தித் தள்ள, ''அந்த சுடுதண்ணீர் குழாய்க்கிட்ட வண்டிய நிறுத்துடா..'' என்றதும் ஆச்சரியமாய்ப் பார்த்தபடி பைக்கை நிறுத்தினான் நண்பன். 

ஆசை ஆசையாய் வந்த எனக்கு கடும் அதிர்ச்சி. துருப்பிடித்து, உடைந்த நிலையில் அந்த சுடுதண்ணீர் குழாய் சிதிலமடைந்து கிடந்தது. அதை பயன்படுத்தி எப்படியும் ஐந்தாறு வருடங்களுக்கு மேல் இருக்கும் என்று தோன்றியது.

 ''ஊருக்குள்ள புதுசா நெறைய குழாய் போட்டாய்ங்க. அதனால இதெல்லாம் யாரும் யூஸ் பண்ணல..'' என்று சர்வ சாதாரணமாக நண்பன் சொல்லிக் கொண்டிருந்தான். நான் அடித்து விளையாடிய, குதூகலித்துக் கும்மாளமிட்ட அந்த குழாய் பம்பை வாஞ்சையோடு தொட்டுப் பார்த்தேன். 

மெல்ல மேல் நோக்கி அசைக்க, முரண்டு பிடித்தபடி கிரீச்சிட்டது. 

'இப்பெல்லாம் யாருமே என்னை கவனிக்கிறதில்ல' என்று அலறுவது போல் தெரிந்தது அந்த கிரீச். 

ஏதோ எனக்கும்.. அந்த குழாய்க்குமான இனம்புரியாத உறவு இன்னும் பட்டுப் போகாமல் இருப்பது போல தோன்றியது. அந்த மார்கழிப் பனியில் தன் வெதுவெதுப்பான தண்ணீரில் என்னை குளிப்பாட்டிய அந்த குழாய் இப்போது வயதாகிப் போன என் தாயைப் போலவே தெரிந்தது. 

ஒரு நொடி.. அந்த இடத்தில்.. நாங்கள் போட்ட கும்மாளச் சத்தம் அப்படியே திரும்பவும் கேட்டது, எனக்கு மட்டும். என் ஞாபக அலமாரியில் சிறைப்பட்டிருந்த சத்தம் வெளிப்பட்டதா அல்லது அடிபம்பு சேமித்து வைத்திருந்த எங்கள் குரல்கள் என்னை எட்டிப் பார்த்ததா என்று புரிந்துகொள்ள முடியாமல் ஒரு விநாடி திணறிப் போனேன். 

என்னையும் அறியாமல் கலங்கியிருந்த கண்களில் இருந்து விழுந்த துளிகள்... அந்த இரும்புக் குழாயின் துருப்பிடித்த தேகத்திற்குள் பாசத்தோடு ஊடுருவியது. 

சில உறவுகளுக்கு உயிர் இல்லாவிட்டாலும் உரிமை மட்டும் இருக்குமோ?


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்