இலங்கை செய்திகள்

சிவாஜிலிங்கம், ரவிகரனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

13 Oct 2021

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில், மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோட்டாபாய கடற்படை முகாமிற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்றைய நாளுக்கு (13) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் தவணையிடப்பட்டிருந்தது.

கொவிட் -19 அசாதாரண சூழ்நிலை காரணமாக முல்லைத்தீவு நீதிமன்றால் குறித்த வழக்கு விசாரணைகள் எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், எதிர்வரும் 2022 பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதிக்கு குறித்த வழக்கின் விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி, முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில், கோட்டாபய கடற்படை முகாமிற்கு முன்பாக இடம்பெற்ற காணி அபகரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் 28.02.2018 அன்று முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், பின்னர் பிணையில் விடுதலையாகியிருந்தார்.

இதேவேளை, வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன் பிணைகோரி, சட்டத்தரணி ஊடாக பிணையில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam