இந்தியா செய்திகள்

சிறுமியை கற்பழித்து கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை

11 Jun 2019

காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8 வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம், இந்தியாவையே உலுக்கியது. ரசனா கிராமத்தை சேர்ந்த நாடோடி இன சிறுமி, குதிரைகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனாள்.

இதுபற்றிய அவளுடைய தந்தை புகாரின் பேரில், கடந்த ஆண்டு ஜனவரி 12-ந் தேதி ஹிராநகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 17-ந் தேதி, அவள் பிணமாக கண்டெடுக்கப்பட்டாள். பிரேத பரிசோதனையில், அவள் கூட்டாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இச்சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காணாமல் போன குதிரையை கண்டுபிடித்து தருவதாக அச்சிறுமியை ஒரு சிறுவன் அங்குள்ள கோவிலுக்கு கூட்டிச்சென்றதும், அங்கு மயக்க மருந்து கொடுத்து அடைத்து வைத்து அவள் கூட்டாக கற்பழிக்கப்பட்டதும், பின்னர் தடியால் அடித்துக் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

அந்த கோவிலின் பூசாரி சஞ்சி ராம், அவருடைய மகன் விஷால், சிறப்பு போலீஸ் அதிகாரிகள் தீபக் கஜுரியா, சுரேந்தர் வர்மா, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் தத்தா, போலீஸ் ஏட்டு திலக் ராஜ், கிராமவாசியான பர்வேஷ் குமார் மற்றும் சஞ்சி ராமின் உறவுக்கார சிறுவன் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். சஞ்சி ராமிடம் ரூ.4 லட்சம் பெற்றுக்கொண்டு, ஆதாரங்களை அழித்ததாக போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சிறுவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து, இந்து ஏக்தா மஞ்ச் என்ற அமைப்பு சார்பில் நடந்த பேரணியில், அப்போது மெகபூபா முக்தி அரசில் பா.ஜனதா மந்திரிகளாக இருந்த சந்தர் பிரகாஷ் கங்கா, லால்சிங் ஆகியோர் பங்கேற்றனர். அது சர்ச்சையை ஏற்படுத்தியதால், அவர்கள் இருவரும் பதவி விலகினர்.

கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி, சிறுமி வழக்கு காஷ்மீர் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. 8 பேர் மீதும் கதுவா கோர்ட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் 9-ந் தேதி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஏப்ரல் 16-ந் தேதி, கோர்ட்டில் விசாரணை தொடங்கியது. சிறுவனை தவிர, மற்ற 7 பேர் மீதும் விசாரணை நடந்தது.

சிறுமி தரப்பு கோரிக்கையை ஏற்று, வழக்கு விசாரணையை பஞ்சாப் மாநிலம் பதான்கோட் கோர்ட்டுக்கு மாற்றுமாறு கடந்த ஆண்டு மே 7-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. விசாரணை விரைவாகவும், ரகசியமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று கூறியது. அதன்படி நடந்த விசாரணை, கடந்த 3-ந் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் பதான்கோட் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. முக்கிய குற்றவாளி சஞ்சி ராமின் மகன் விஷாலை தவிர, மீதி 6 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளித்தது. சந்தேகத்தின் பலனை விஷாலுக்கு அளித்து அவரை விடுதலை செய்வதாக தெரிவித்தது.

கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் சஞ்சி ராம், சிறப்பு போலீஸ் அதிகாரி தீபக் கஜுரியா, பர்வேஷ் குமார் ஆகியோர் குற்றவாளிகள் என்றும், மற்ற போலீஸ் அதிகாரிகள் 3 பேரும் ஆதாரங்களை அழித்ததற்கான குற்றவாளிகள் என்றும் கோர்ட்டு அறிவித்தது. தண்டனை விவரம், பிற்பகலில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

கற்பழிப்பு, கொலையில் ஈடுபட்ட சஞ்சி ராம், தீபக் கஜுரியா, பர்வேஷ் குமார் ஆகிய 3 பேருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத்தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதற்கிடையே, நேற்று பிற்பகலில், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை கோர்ட்டு அறிவித்தது. கொலை குற்றத்துக்காக சஞ்சி ராம், சிறப்பு போலீஸ் அதிகாரி தீபக் கஜுரியா, பர்வேஷ் குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் கூட்டு கற்பழிப்பில் ஈடுபட்டதற்காக, 3 பேருக்கும் தலா 25 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.

ஆதாரங்களை அழித்ததற்காக, மற்ற 3 போலீஸ் அதிகாரிகள் ஆனந்த் தத்தா, திலக் ராஜ், சுரேந்தர் வர்மா ஆகியோருக்கு தலா 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்புக்கு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி வரவேற்பு தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்