உலகம் செய்திகள்

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ்

21 Dec 2018


சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடக்கிறது. இதற்கு மத்தியில், உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு கால் பதித்து ஆக்கிரமிக்க தொடங்கினர். அவர்களை வீழ்த்துவதற்காக அமெரிக்க படைகள் அங்கு சென்றன. அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமிருந்த பல நகரங்கள் மீட்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளை தோற்கடித்து விட்டதாக கூறி, அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டார்.

இது அமெரிக்க கூட்டாளிகளுக்கும், எம்.பி.க்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவது தொடங்கிவிட்டது என வாஷிங்டன் வெள்ளை மாளிகை கூறுகிறது.

“சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெறுவது என்னும் டிரம்பின் முடிவு, அவரது கொள்கையுடன் ஒத்து போகிறது. அங்கு அமெரிக்க படைகளை அனுப்பியதின் நோக்கம், ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிப்பதுதானே அன்றி உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வருவது அல்ல” எனவும் வெள்ளை மாளிகை கூறுகிறது.

மேலும் இதுபற்றி வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் சாரா சாண்டர்ஸ் கூறும்போது, “சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை தோற்கடித்து வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால் இது உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு கூட்டணி முடிந்து விட்டது என்பதற்கான சமிக்ஞை (சிக்னல்) அல்ல. இந்த நடவடிக்கையின் அடுத்த கட்டத்துக்கு மாற வேண்டியது இருக்கிறது. அதனால்தான் சிரியாவில் இருந்து படைகள் வாபஸ் பெறப்படுகின்றன. மத அடிப்படையிலான பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை தொடர்வோம்” என குறிப்பிட்டார்.


 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்