05 Aug 2022
தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியினுடைய நிர்வாகியாகவும் உள்ளார். இவர் 2015-யிலிருந்து சினேகன் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதையடுத்து இவரது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைதளங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூல் செய்து வருவதாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சினேகன், கூறியதாவது " சில தினங்களுக்கு முன்பாக தன்னுடைய நண்பர்கள் தன்னுடைய அறக்கட்டளை பெயரில் சமூக வலைதள கணக்குகள் மூலம் பொது மக்களிடம் பணம் கேட்டு வருவதாக தெரிவித்தனர். மேலும், அதற்கடுத்த சில தினங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் தன்னுடைய அறக்கட்டளை பெயரில் பணம் பெறுவதால் தன்னிடம் விசாரணை செய்தனர்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட இணையதளத்தில் உள்ள முகவரியை இரண்டு முறை சட்டபூர்வமாக விளக்கம் கேட்டு கடிதம் எழுதியும், எந்தவித பதிலும் தரவில்லை. அதில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசிய போது தன்னை பொதுவெளியில் சந்திக்க வேண்டும் என அவர் கூறினார். இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள முகவரியை சென்று ஆய்வு செய்தபோது அங்கு அப்படி ஒரு அலுவலகமே இல்லை என்பது தெரிய வந்தது.
என் அறக்கட்டளையில் பெயரில் தொடங்கப்பட்ட சமூக வலைதளத்தை ஆராய்ந்த போது அதில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமியின் பெயர் இடம் பெற்றிருந்தது. மேலும், அவர் வழக்கறிஞர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி தனது அறக்கட்டளையின் பெயருக்கு களங்கம் ஏற்படாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன்" என தெரிவித்தார்