இலங்கை செய்திகள்

சவேந்திரா சில்வா இராணுவத்தின் பிரதானியாக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு

12 Jan 2019

இலங்கை இராணுவத்தின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் நாட்டின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

இராணுவத்தின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் வடக்கு- கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர் கனகரஞ்சினி யோகராசா தெரிவிக்கையில், “நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்திற்கு நீதி கிடைக்கும் என்ற நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து எங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால், இன்று வரை எமக்கான தீர்வு கிடைக்கவில்லை. நாம் எமது உறவுகளை தொடர்ச்சியாக தேடிக்கொண்டிருக்கின்றோம்.

இறுதி யுத்தத்தின் போது யுத்த குற்றசாட்டுகளுக்கு உள்ளான இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் இராணுவப் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கிய படையணி ஊடாகவே யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியில் எமது உறவுகள் சரணடைந்திருந்தனர்.  அவர்கள் ஊடாக கையளிக்கப்பட்டவர்களே காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விக்கு பதிலளிக்ககூடிய பொறுப்புவாய்ந்த அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா இருக்கின்றார். 

இந்த நியமனத்தை நாங்கள் வன்மையாக கண்டிப்பதோடு மிகவும் கவலை அடைகிறோம். எங்களுக்கான நீதியினை இந்த அரசாங்கம் பெற்று தரவேண்டும்” என்று  கூறினார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்