இந்தியா செய்திகள்

சவப்பெட்டி ஊழலை எழுப்ப காங்கிரஸ் திட்டம்

13 Aug 2017

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது சுவீடன் நாட்டில் இருந்து 1986–ம் ஆண்டு போபர்ஸ் பீரங்கிகள் வாங்குவதற்கு செய்துகொண்ட ஒப்பந்தத்திற்காக இந்தியாவின் பிரபல அரசியல் தலைவர்களுக்கு ரூ.64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணையும் நடத்தியது. பின்னர் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று டெல்லி ஐகோர்ட்டு 2005–ல் தீர்ப்பு கூறியது.

தற்போது இந்த விவகாரத்தை பா.ஜனதா மீண்டும் கையில் எடுத்து இருக்கிறது. அண்மையில் இது தொடர்பாக சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கு பாராளுமன்ற பொதுக் கணக்கு குழு சம்மன் அனுப்பி விசாரணையும் நடத்தியது.

இதற்கிடையே போபர்ஸ் விவகாரத்தை பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் முந்தைய தலைவர் கே.வி.தாமஸ், தற்போதைய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இருவருமே சரிவர கையாளவில்லை என்பதால்தான் இப்பிரச்சினை மீண்டும் எழுந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் இடையே கருத்து நிலவுகிறது.

அதேநேரம் பா.ஜனதா போபர்ஸ் பீரங்கி ஊழலை கையில் எடுத்து இருப்பதால், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 1999–ம் ஆண்டு கார்கில் போரின்போது நடந்ததாக கூறப்படும் சவப்பெட்டி ஊழலை காங்கிரஸ் கையில் எடுத்து இருக்கிறது.

இதுபற்றி மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியதாவது:–

இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி கார்கில் போர் குறித்து 2004–2005–ம் ஆண்டு தாக்கல் செய்த அறிக்கையில், போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக 500 சவப்பெட்டிகளை வாங்கியதில் பெரும் ஊழல் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது ஒவ்வொரு சவப்பெட்டியும் ரூ.1½ லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. இது அசல் விலையை விட 13 மடங்கு கூடுதல் ஆகும்.

பிஜூ ஜனதாதளம் எம்.பி. பர்திருஹரி மஹ்தாப் தலைமையிலான பொதுக் கணக்கு குழு மற்றும் துணை குழுவும் கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையை ஆய்வு செய்தது. எனவே இது தொடர்பாக விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்துவோம். பாராளுமன்றத்திலும் இப்பிரச்சினையை எழுப்புவோம்.

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV