இலங்கை செய்திகள்

சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடுகின்றது

13 Jun 2019

ஏப்ரல் தாக்குதல்கள் குறித்த விசாரணை செய்யும் நாடளுமன்ற தெரிவுக்குழுவில் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா முன்னிலையாகவுள்ளார்.

விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் 5ஆவது அமர்வு இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கூடவுள்ளது.

இன்றைய அமர்வில், முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுடன், முன்னாள் பொலிஸ்மா அதிபர் N.K.இளங்ககோன் மற்றும் அரச நிர்வாக அமைச்சின் செயலாளரும் சாட்சியம் வழங்கவுள்ளனர்.

தெரிவுக்குழுவின் 4ஆவது அமர்வு நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை இடம்பெற்றது.

இதன்போது, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பின் தலைவர் ரிஸ்வி மௌலவி, காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் மொஹம்மட் சுபெய் உள்ளிட்டோர் முன்னிலையாகி சாட்சியமளித்திருந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு இதுவரையில் நான்கு தடவைகள் கூடியுள்ளது.

இதுவரை இடம்பெற்ற அமர்வுகளில் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட, தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ் மற்றும் நாலக டி சில்வா, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரிடம் சாட்சியம் பெறப்பட்டுள்ளன.

இவர்கள் வழங்கிய சாட்சியங்கள் மூலம் பல உண்மைகள் அம்பலமாகியுள்ளன. இதனையடுத்து நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டன. குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரியிருந்தார்.

எனினும் சர்ச்சைகளுக்கு மத்தியில் குறித்த குழுவின் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்