இலங்கை செய்திகள்

சம்பந்தனும் விக்னேஸ்வரனும் இணைந்து செயற்பட வேண்டும் -மனோ கணேசன்

15 Apr 2018

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் மனம் திறந்து கலந்துரையாடி, தம்மிடையேயுள்ள முரண்பாடுகளைக் களைந்து ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தங்களுக்குரிய பணிகளை முன்னெடுக்க வேண்டும்.என அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக தென்னிலங்கையில் குழு ஒன்று உருவாகியுள்ளது. அவரிடமிருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பறிக்க வேண்டுமென்ற நோக்கில் பொதுஜன முன்னணி கொழும்பில் பூசை போட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு காலத்தில் வடக்குக்- கிழக்கில் தமிழீழம் உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் அதற்கான போராட்டங்களையும் முன்னெடுத்தனர். தனிநாடு, தமிழீழம் என்ற சிந்தனை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.

தற்போது தமிழீழம் என்ற எண்ணப்பாடு கைவிடப்பட்டு, ஒரேநாடு என்ற எண்ணப்பாட்டை வடக்கு- கிழக்கில் வாழும் மக்களின் அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.

வடக்கு மாகாண சபையில் மிக அதிகமான பெரும்பான்மையுடன் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருக்கிறது. அபிவிருத்தியும், அரசியலும் இரண்டு கண்களாகும். எது வலது கண் எது இடது கண் என்று தெரியாது. இந்த இரண்டையும் சமாந்தரமாக முன்னெடுத்தால் தான் இன்றைய கால சவால்களைச் சமாளிக்க முடியும்.

ஆனால், எதிர்பார்த்த அரசியல், அபிவிருத்திச் செயற்பாடுகள் வடக்கில் இடம்பெறவில்லை என்பது கண்கூடாகத் தெரிகின்றது” என்று அவர் தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்