இந்தியா செய்திகள்

சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது குறித்து டிஜிபி விளக்கம்

11 Sep 2019

ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் பால்நாடு உள்ளிட்ட கிராமங்களில்  தெலுங்குதேச கட்சி உறுப்பினர்கள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரால்  தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


பால்நாடு, நரசரபேட்டா, குஜாராலா உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில்  வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது வீட்டில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

அவரது இல்லத்திற்கு செல்ல முயன்ற தெலுங்கு தேசம் உறுப்பினர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது குறித்து அம்மாநில டிஜிபி ஜி. சவாங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பால்நாடு, குண்டூரில் பதற்றங்கள் அதிகரித்து வருவதால்  சட்டம் ஒழுங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். மாநில அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக போராடியதற்காக போலீசார் அவரை தடுப்புக் காவலில் வைக்கவில்லை என்று தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்