இந்தியா செய்திகள்

சசிகலாவுக்கு சலுகை வழங்கிய விவகாரம் விரைவில் அறிக்கை தாக்கல்

12 Aug 2017

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்கியது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கை கர்நாடக அரசிடம் விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் சசிகலாவுக்கு கூடுதல் அறை வசதிகள், சிறப்பு சமையல், மருத்துவம், உதவியாளர்கள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுவதாகவும், இதற் காக டிஜிபி சத்தியநாராயண ராவ், தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் உள்ளிட்டோருக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் டிஐஜி ரூபா கடந்த மாதம் புகார் தெரிவித்தார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து கர்நாடக அரசு டிஜிபி சத்தியநாராயண ராவ், டிஐஜி ரூபா ஆகியோரை இடமாற்றம் செய்தது. சிறை முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் கடந்த 17-ம் தேதி உயர்மட்ட விசாரணைக் குழுவையும் அமைத்தது.

வினய்குமார் தலைமையிலான அதிகாரிகள் பரப்பன அக்ரஹாரா சிறை, டிஜிபி, டிஐஜி அலுவலகம் ஆகியவற்றில் ஆய்வு செய்தனர். சிறை முறைகேடு தொடர்பாக ரூபா அளித்த 2 அறிக்கைகள், சத்தியநாராயண ராவ் அளித்த அறிக்கை, ஊடகங்களில் வெளியான சசிகலா, ஏ.கே.தெல்கி ஆகியோரின் வீடியோ ஆதாரங்கள் ஆகியவற்றையும் பரிசீலித்தனர்.

இதனிடையே, புகார் தொடர்பாக முன்னாள் டிஐஜி ரூபா, அண்மையில் ஓய்வு பெற்ற டிஜிபி சத்யநாராயண ராவ் ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சிறையில் நடந்த முறைகேடுகள், கைதிகளின் சொகுசு வாழ்க்கை, குறிப்பாக சசிகலா, ஏ.கே.தெல்கி ஆகியோருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகை உள்ளிட்டவை குறித்து 30-க்கும் மேற்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டதாக தெரிகிறது

இந்நிலையில், கர்நாடக அரசு அளித்த ஒருமாத காலக்கெடு முடிவடைய உள்ளதால், அறிக்கை தயாரிக்கும் பணிகளை வினய்குமார் தலைமையிலான விசாரணைக் குழு முடுக்கிவிட்டுள்ளது. வினய்குமார் தனது அறிக்கையை கர்நாடக அரசின் உள்துறையிடம் விரைவில் தாக்கல் செய்வார் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV