இந்தியா செய்திகள்

கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கும்,வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு

16 Apr 2018

ஜம்மு - காஷ்மீர் பகுதியின் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, எட்டு பேர் கொண்ட கும்பலால் ஜனவரி மாதம் மயக்கமருந்து கொடுத்து தொடர்ச்சியாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு ஆதரவாக அந்தப் பகுதியில் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இந்த வழக்கில், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிடாமல் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சிறுமி தரப்புக்காக ஆஜராவதாக அறிவித்ததிலிருந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன என்று வழக்கறிஞர் தீபக் சிங் ராஜ்வாட் தெரிவித்துள்ளார். இத்தகைய எதிர்ப்புகளுக்கு மத்தியில், இந்த வழக்கு விசாரணை இன்று தொடங்கியது.

கத்துவா சிறுமி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரும்  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்

கத்துவா சிறுமி வன்கொடுமை வழக்கை ஏப்ரல் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம். குற்றப்பத்திரிக்கையை குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேருக்கும் அளிக்க கத்துவா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

 8 பேரும் நார்கோ சோதனைக்கு தயாராக இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டோரின் தரப்பு வழக்கறிஞர் பேட்டி  அளித்தார்.

இந்த நிலையில்  காஷ்மீர் சிறுமி வழக்கை சண்டிகருக்கு மாற்றக்கோரியும், தன் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் சிறுமியின் தந்தை சார்பில்  சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.  இந்த மனுவை அவசர வழக்காக  எடுத்து கொண்ட சுப்ரீம் கோர்ட் பிற்பகல் விசாரணை நடத்தியது.

சிறுமியின் தந்தை சார்பில் சுப்ரீம் கோர்ட் மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங் வாதாடினார்.

காஷ்மீர் போலீசார் சிறப்பாக செயல்பட்டனர். அனைத்து நபர்களையும் சான்றுகளிலும், விஞ்ஞான அடிப்படையிலும் கைது செய்தனர்.  தொய்வு ஏற்படும் பட்சத்தில் சிபிஐக்கு மாற்றலாம்   என  இந்திரா ஜெய்சிங்  வழக்கறிஞர் வாதாடினார்

அப்போது  கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கும், வழக்கில் ஆஜரான வழக்கறிஞருக்கும் உரிய பாதுகாப்பு தர  சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோருவது குறித்த ஜம்மு காஷ்மீர் அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்