விளையாட்டு செய்திகள்

கோப்பை வென்றது மான்செஸ்டர் சிட்டி

14 May 2019

 இங்கிலீஷ் பிரிமியர் லீக் (இ.பி.எல்.,) கால்பந்து தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணி, 4வது முறையாக கோப்பை வென்றது.

இங்கிலாந்தில், உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்ற பிரிமியர் லீக் தொடரின் 27வது சீசன் நடந்தது. இதில் செல்சி, கார்டிப் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட், ‘நடப்பு சாம்பியன்’ மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்றன.

இதன் கடைசி சுற்று லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி, பிரைட்டன் அன்ட் ஹோவ் ஆல்பியன் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய மான்செஸ்டர் சிட்டி அணி 4–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் லிவர்பூல் அணி 2–0 என, வால்வர்ஹாம்ப்டன் வான்டெரர்ஸ் அணியை வென்றது. கார்டிப் சிட்டி அணி 2–0 என, மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தியது.

நான்காவது முறை: லீக் சுற்றின் முடிவில் 38 போட்டிகளில், 32 வெற்றி, 2 ‘டிரா’, 4 தோல்வி என, 98 புள்ளிகளுடன் மான்செஸ்டர் சிட்டி அணி முதலிடம் பிடித்து 4வது முறையாக (2011–12, 2013–14, 2017–18, 2018–19) கோப்பை வென்றது. இதன்மூலம் இத்தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அணிகளுக்கான பட்டியலில் மான்செஸ்டர் சிட்டி அணி 3வது இடம் பிடித்தது. முதலிரண்டு இடங்களில் முறையே மான்செஸ்டர் யுனைடெட் (13 முறை), செல்சி (5) அணிகள் உள்ளன.

இம்முறை லிவர்பூல் அணி, 97 புள்ளிகளுடன் (30 வெற்றி, 7 ‘டிரா’, ஒரு தோல்வி) 2வது இடம் பெற்றது. மூன்றாவது இடத்தை செல்சி (72 புள்ளி) அணி கைப்பற்றியது.


 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்