இலங்கை செய்திகள்

கேப்பாப்பிலவு குறித்து சிங்கள மக்கள் அறிந்துகொள்வது அவசியம் -மனோ கணேசன்

17 Feb 2017

அம்பாந்தோட்டையிலுள்ள 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கப்போவதாக வெளியான செய்தியை கேட்டு கிளர்ந்தெழுந்து பெரும் போராட்டங்களை நடத்திய சிங்கள மக்கள், தமது சொந்த நிலத்திற்காய் கடந்த இரு வார காலமாக வீதிகளில் இரவு பகலாய் போராடி வரும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் குறித்து அறிந்துகொள்வது அவசியமென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பிரபல சிங்கள தனியார் வானொலியின் நேரடி நிகழ்ச்சியொன்றில் நேற்றிரவு பங்கேற்றிருந்த மனோ கணேசன் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு சிங்கள மக்கள் தலைமை தாங்கியமை, பொலிஸாருடன் இளைஞர்கள் மோதி பெரும் அமைதியின்மை ஏற்பட்டதோடு, அரச சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட பல விடயங்களை சுட்டிக்காட்டிய மனோ கணேசன், அங்கு காணி சுவீகரிப்பு என்ற விடயம் முடிவுக்கு வந்துவிட்டதையும் சுட்டிக்காட்டினார்.

ஆனால், கடந்த இரு வார காலமாக குழந்தைகள், வயோதிபர்கள் என வேறுபாடின்றி இரவு பகலாக மழையிலும் பனியிலும் போராடி வரும் இம்மக்களின் அமைதிப் போராட்டத்திற்கு இன்னும் தீர்வு கிடைக்காமல் உள்ள நிலையில், இது தொடர்பில் சிங்கள மக்கள் அறியவேண்டுமென மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் கேப்பாப்பிலவு பகுதிக்கு விரைவில் செல்லவுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்