உலகம் செய்திகள்

கேட்டலோனியா அரசை கலைத்து ஸ்பெயின் அதிரடி

29 Oct 2017

ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணம் கேட்டலோனியா; பார்சிலோனாவை தலைநகராக கொண்ட கேட்டலோனியா, வடகிழக்கு ஸ்பெயினில் வளமான பகுதி. இங்கு ஸ்பெயின் நாட்டின் மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் வசிக்கின்றனர். நாட்டின் ஏற்றுமதியில் 25.6 சதவீத பங்களிப்பை இது பெற்றிருக்கிறது.

ஸ்பெயினின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் இதன் பங்கு 19 சதவீதம் ஆகும். ஸ்பெயினுக்கு வருகிற அன்னிய நேரடி முதலீட்டில் 20.7 சதவீதம் கேட்டலோனியாவுக்கு போகிறது. ஸ்பெயினிடம் இருந்து சுதந்திரம் பெற்று தனி நாடாக திகழ வேண்டும் என்ற குரல் அங்கு ஓங்கி ஒலிக்கத்தொடங்கியது.

இதுபற்றி அங்கு கடந்த 1-ந் தேதி பொது வாக்கெடுப்பு நடந்தது. இதில் 42 சதவீத வாக்காளர்கள் வாக்கு அளித்தனர். அவர்களில் 90 சதவீதம்பேர் சுதந்திரத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

மற்றவர்கள் வாக்கெடுப்பை புறக்கணித்தனர். இந்த பொது வாக்கெடுப்பு செல்லாது என ஸ்பெயின் நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்த நிலையில் கேட்டலோனியா பாராளுமன்றத்தில் சுதந்திர பிரகடனத்தின் மீது நேற்று முன்தினம் நடந்த ஓட்டெடுப்புக்கு ஆதரவாக 70 ஓட்டுகளும், எதிராக 10 ஓட்டுகளும் விழுந்தன. 135 இடங்களை கொண்ட பாராளுமன்றத்தில் 70 ஓட்டுகள் ஆதரவாக விழுந்ததால் சுதந்திர பிரகடனம் நிறைவேறியது.

ஆனால் இதை ஸ்பெயின் அரசு ஏற்கவில்லை.

சுதந்திர பிரகடனம் வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களில் கேட்டலோனியா பிராந்திய அரசை ஸ்பெயின் அரசு அதிரடியாக கலைத்து உத்தரவிட்டது, இதற்கான ஒப்புதலை ஸ்பெயின் பாராளுமன்றம் வழங்கியது. இதை ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் தெரிவித்தார்.

இதையடுத்து கேட்டலோனியா, ஸ்பெயின் அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்ட அரசிதழ், ஸ்பெயின் துணை பிரதமர் சொராயா சாயின்ஸ் டி சாந்தமரியாவிடம் தரப்பட்டது.

கேட்டலோனியாவில் டிசம்பர் 21-ந் தேதி பிராந்திய தேர்தல் நடத்தப்படும். அதே நேரத்தில் இந்த தேர்தல், கேட்டலோனியா பிரச்சினைக்கு தீர்வைத் தேடித்தருமா என தெரியவில்லை.இந்த நடவடிக்கைக்கு, ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டுள்ள அதிபர் கார்லஸ் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 12 பேரும் கீழ்ப்படியாவிட்டால், அவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்பெயின் அரசு எச்சரித்துள்ளது.

கேட்டலோனியா விவகாரத்தில் ஸ்பெயின் நாட்டுக்கு அமெரிக்கா வெளிப்படையான ஆதரவை தெரிவித்துள்ளது.

இதுபற்றி அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹெதர் நவார்ட், வாஷிங்டனில் கூறும்போது, “கேட்டலோனியா, ஸ்பெயின் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி. அந்த நாட்டை அரசியல் சாசனப்படி வலுவானதாகவும், ஒன்றுபட்டதாகவும் திகழச்செய்வதை அமெரிக்கா ஆதரிக்கிறது” என்று குறிப்பிட்டார்.

 

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV