உலகம் செய்திகள்

குகையிலிருந்து வந்த ஆஸ்திரேலிய மருத்துவருக்கு காத்திருந்த துயரச் செய்தி!

12 Jul 2018

தாய்லாந்து குகையில் சிக்கிய மாணவர்கள் அனைவரும் நேற்று வெற்றிகரமாக மீட்கப்பட்டு வெளியில் கொண்டுவரப்பட்டதை தாய்லாந்து மட்டுமின்றி உலக நாடுகளே கொண்டாடி வருகிறது. ஆனால், அம்மாணவர்களுடன் இறுதி வரை இருந்து கடைசி நபராக குகையைவிட்டு வெளியேறிய ஆஸ்திரேலிய மருத்துவருக்கு தமது தந்தையார் இறந்துவிட்டதாக வந்த செய்தி பேரதிர்ச்சியைத் தந்தது.

தாய்லாந்தில் உள்ள தி தம் லுஅங் குகைக்குள் ஜூன் 23-ஆம் தேதியன்று சென்ற மாணவர்கள் அன்று பெய்த கடுமையான மழையால் குகையினுள் சிக்கிக்கொண்டனர். அதன் பின் ஒரு வார காலமாக அவர்களைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. 10 நாள் தேடுதலுக்குப் பிறகு மாணவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குகையில் நீர் சூழ்ந்துவிட்டதால் தப்பிக்க வழியின்றி இரண்டு வாரங்களுக்கும் மேலாக குகைக்குள் சிக்கியிருந்தார்கள் அந்த மாணவர்கள். அவர்களை மீட்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து துறைசார் வல்லுநர்களை அழைத்து வந்தது தாய்லாந்து அரசாங்கம்.

அப்படியாக வந்தவர்தான் ஆஸ்திரேலியாவினைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹாரிஸ். மயக்க மருந்தியல் நிபுணரான ரிச்சர்ட், குகை நீச்சல் வீரரும் கூட. குகைக்குள் ஏற்படும் விபத்துகளில் சிக்கியிருப்பவர்களை மீட்பதில் அவர் வல்லுநர். அவரை இந்த மீட்புப் பணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று இங்கிலாந்து நீச்சல் வீரர்கள் பரிந்துரைக்கவும் ஆஸ்திரேலியாவில் இருந்து தாய்லாந்துவிற்கு வரவழைக்கப்பட்டார்.

குகைக்குள் சென்று அங்கிருக்கும் அனைவரும் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார்களா, அனைவராலும் குகையைக் கடந்து செல்ல இயலுமா என்று பரிசோதித்து, இந்த மீட்பு நடவடிக்கைகளுக்கு 13 பேரும் தயாராக இருக்கிறார்கள் என்று கூறியவர் ரிச்சர்ட் தான். மூன்று நாட்கள் குகைக்குள் அம்மாணவர்களுடன் தங்கியிருந்தார் ரிச்சர்ட்.

13 நபர்களும் குகையில் இருந்து வெளிவந்த பின்னர், இறுதியாக குகையில் இருந்து வெளியே வந்தவர் ரிச்சர்ட். இவர்கள் மீட்கப்பட்ட சில மணி நேரங்களிலே ஆஸ்திரேலியாவில் இருந்த ரிச்சர்டின் தந்தை உயிரிழந்துவிட்டார் எனும் செய்தி கிடைத்தது.

அதைப் பற்றி ரிச்சர்ட் எதுவும் பேசாத நிலையில், அவர் உடனடியாக ஆஸ்திரேலியா புறப்பட்டார். விடுமுறையில் குடும்பத்தாருடன் இருந்திருக்க வேண்டிய சமயத்தில்தான் ரிச்சர்ட் இந்த மீட்புப் பணிக்காக தாய்லாந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்