இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை ஜனாதிபதியே கொண்டு வந்து தர வேண்டும் - உறவினர் கோரிக்கை

24 Jan 2020

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை ஜனாதிபதியே கொண்டு வந்து தரவேண்டும். யுத்தத்தின் போது உயிரிழந்த பிள்ளைகளைத் தாங்கள் கேட்கவில்லை. உயிருடன் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளையே கேட்கின்றோம். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்து அரசாங்கம் பதில் சொல்லியே ஆக வேண்டுமென மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று  முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “காணாமல் ஆக்கப்பட்டது எமது பிள்ளைகளும் உறவுகளுமே. ஆனால் தற்போது புதிய அரசாங்கம் வந்துள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரும் இல்லை என ஜனாதிபதி கூறுகின்றார். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இல்லையென்றால் அவர்கள் எங்கே என்பது அவருக்குத்தான் தெரியும். அவர்களுக்கு என்ன நடந்தது? என்ன செய்தார்கள் என்பதும் அவருக்கே தெரியும். அவருடைய காலத்திலேயே உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிள்ளைகளே காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். யுத்தத்தின் போது உயிரிழந்த பிள்ளைகளை நாங்கள் கேட்கவில்லை. இறந்த உறவுளைக் கேட்டு நாங்கள் போராடவில்லை. உயிரோடு காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளைக் கேட்டே நாங்கள் போராடுகின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?அவர்கள் எங்கு இருக்கின்றார்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கேட்டே நாங்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்றோம். அரசாங்கம் இதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். அவருடைய ஆட்சிக் காலத்திலே பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். பிடித்துச் செல்லப்பட்டனர்.

இவர் கூறியதாலேயே அனைத்துமே நடந்துள்ளது என்று நாங்கள் உறுதியாக நம்பியிருக்கின்ற நிலையில் ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரும் இல்லை என்று கூறியுள்ளார். பிடித்துச் செல்லப்பட்ட பிள்ளைகள் எங்கே என்று அவருக்குத் தெரியும்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் என்ன நிலையில் இருந்தாலும் எங்களிடம் ஒப்படையுங்கள். தற்போது கூட புலனாய்வுத் துறையினரால் (சி.ஐ.டி) எங்களுக்குப் பிரச்சினையாகவே உள்ளது. காலை நேரத்தில் வீடுகளுக்கு வருகின்றனர்.

அவர்களின் முகங்களிலே நாங்கள் முழிக்க வேண்டியதாக இருக்கின்றது. இன்று எங்கே போகின்றீர்கள்? என்ன கலந்துரையாடல் உள்ளது? எப்போது ஜெனிவாவிற்கு போகின்றீர்கள் எனக் கேள்வி கேட்கின்றனர். இவர்கள் ஏன் எங்களை விசாரணை செய்ய வேண்டும்? இவர்கள் எங்களை விசாரணை செய்யவேண்டிய அவசியமில்லை.

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை ஜனாதிபதியே கொண்டு வந்து தரவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்