இந்தியா செய்திகள்

கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்தது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

24 Nov 2022

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியிடம் தி.மு.க. அரசு மீது 10 பக்க புகார் மனுவை எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் அளித்தார். இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று மாலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக கவர்னரை சந்தித்து, பொய்களின் ஒட்டுமொத்த உருவமாக, புனைந்துரைகள் நிறைந்த புளுகு மூட்டைகள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்திருக்கிறார். அ.தி.மு.க.வை யார் கைப்பற்றுவது என்பது பற்றி அவர்களிடையே பெரிய யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. அந்த யுத்தத்தில்தான் பெற்றி பெற வேண்டி தன்னுடைய எஜமானர்களை சந்தித்துவிட்டு தற்போது எதிர்க்கட்சி தலைவர் என்ற நினைப்பு திடீரென்று வந்தவுடன் சந்தித்து இருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் தன்னை இணைத்து வைக்க அப்போதிருந்த கவர்னர் ஒரு சமரச உடன்படிக்கையை ஏற்படுத்தியது போன்று இப்போது அ.தி.மு.க.வில் இரு அணிகளுக்கும் இடையே நடக்கக்கூடிய உள்கட்சி போட்டா போட்டியில் தனக்கு சாதகமான ஒரு நிலையை உருவாக்குவதற்கு கவர்னரிடம் முறையிட்டாரா? என்ற சந்தேகம் எனக்கு வலுவாக எழுகிறது.

தற்போது பா.ஜ.க.வில் நடைபெற்றுகொண்டிருக்கிற உள்கட்சி பிரச்சினை உச்சக்கட்டத்தை எட்டியிருக்கக்கூடிய நிலையில் அதை திசை திருப்புவதற்காக எடப்பாடி பழனிசாமி ஒரு கருவியாக மாறி கவர்னரை சந்தித்து நாடகத்தை அரங்கேற்றினாரா? என்ற கேள்வியும் எனக்குள்ளே எழுகிறது.

சென்னை பெருமழையை மிக சாதுரியமாக, சிறப்பான நடவடிக்கைகள் மூலம் மழைநீர் தேங்காத வகையில் எல்லோருடைய பாராட்டுகளையும் தமிழக அரசு குறிப்பாக முதல்-அமைச்சர் பெற்றுள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் கவர்னரை சந்தித்து இத்தகைய முறையீட்டுகளை வைத்திருக்கிறாரா? என்று நான் நினைக்கிறேன்.

அவர் சொல்லிய குற்றச்சாட்டுகளில் ஆதாரங்கள் இல்லை. 'பொத்தாம் பொதுவாக' கவர்னரை சந்தித்து குற்றச்சாட்டுகளை அடுக்கிவிட்டு போய் இருக்கிறார். அப்படி ஆதாரங்கள் இருந்தால் அவர் நீதிமன்றத்தை அணுகி இருக்க வேண்டுமே அல்லாமல், இதுபோன்ற புளுகுமூட்டைகள் பின்னால் ஒளிந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் நேரிட்டிருக்காது.

எடப்பாடி பழனிசாமி அளித்த மனுவில் பிரபலப்படுத்தி, அங்கலாய்த்திருப்பது கோவை கியாஸ் வெடிப்பு சம்பவம். இந்த சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்தில் குற்றவாளி அடையாளம் காணப்பட்டத்துடன் அவருக்கு உடந்தையாக இருந்த குற்றவாளிகள் 'உபா' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் என்ற தகவலை நான் ஏற்கனவே தூத்துக்குடியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கி கூறியிருக்கிறேன்.

அங்கொன்றும், இங்கொன்றும் நடக்கும் சம்பவங்களை வைத்துக்கொண்டு ஏதோ தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு போய் விட்டது என்பது போன்ற ஒரு மாய தோற்றத்தை, மாயாஜால பிம்பத்தை உருவாக்குவதற்கு எடப்பாடி பழனிசாமி முற்பட்டிருக்கிறார். இது முற்றிலும் அபத்தமானது.

மருந்து பற்றாக்குறை இருக்கிறது என்று ஒன்றை கண்டுபிடித்து சொல்லி இருக்கிறார். தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் போதியளவு மருந்து கையிருப்பு இருக்கிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எல்லா இடங்களுக்கும் சென்று ஆய்வு செய்திருக்கிறார்.

திராவிட மாடல் ஆட்சி

மிகச்சிறப்பாக, அற்புதமாக திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் முதல்-அமைச்சரின் இந்த ஆட்சிக்கு பெருகி வரக்கூடிய மக்களின் ஏகோபித்த ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமியின் இந்த செயல் உள்ளபடியே எள்ளி நகையாடத்தக்கது. வெறுத்து ஒதுக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.
 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam