இந்தியா செய்திகள்

கர்நாடக சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் சிறப்பு பேட்டி

16 Jul 2017

கர்நாடக சிறைத்துறை டிஐஜி தன் சுய நலத்திற்காகவும் விளம்பரத்திற்காகவும் தன் மீது லஞ்சப் புகாரை தெரிவித்துள்ளதாக டிஜிபி சத்தியநாராயண ராவ் கூறியுள்ளார். 

சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்க நீங்களும் மற்ற அதிகாரிகளும் சசிகலாவிடம் 2 கோடி ரூபாயை லஞ்சம் வாங்கியதாக டிஐஜி ரூபா டி.மவுட்கில் புகார் தெரிவித்துள்ளாரே?

இல்லை. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அவரது குற்றச் சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல் லாதபோது ஊடகங்கள் ஏன் பெரிதுபடுத்துகின்றன? இது தொடர்பாக விசாரிக்க கர்நாடக அரசு உயர்நிலை விசாரணைக் குழுவை நியமித்திருக்கிறது. அப்போது உண்மை தெரியவரும்.

உயர்நிலை விசாரணை குழுவுக்கு முன்பாகவே சிறையில் வீடியோ, புகைப்பட ஆதாரங்கள் அழிக்கப்பட் டுள்ளதாக ரூபா கூறியிருக்கிறாரே?

சிறையில் எந்த ஆதாரத்தையும் அழிக்கவில்லை. அவர் எதையாவது கூறி, பிரச்சினையை பெரிதாக்குகிறார். நாம் நினைப்பதுபோல திடீரென போய் ஆதாரங்களை அழிக்க முடியாது. இத்தகைய குற்றச்சாட்டை நான் ஏற்கமாட்டேன். தேவையற்ற குற்றச்சாட்டுக்களை சொல்லிக் கொண்டே இருந்தால் அவர் மீது வழக்குப் போடுவேன்.

சசிகலாவுக்கு சிறப்பு சமையலறை, வரவேற்பறை, சமையலர், உதவியாளர் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ரூபா சொல்லி இருக்கிறாரே?

அவர் சொல்கிறார் என்பதால் எல்லாம் உண்மையாகிவிடுமா? சசிகலாவுக்கு எந்த சிறப்பு வசதி யும் செய்யவில்லை. நீதிமன்ற உத்தரவின்பேரில் மின்விசிறி, தொலைக்காட்சி போன்ற சில வசதிகள் மட்டுமே செய்யப்பட்டிருக்கின்றன. சசிகலா சிறை உணவைதான் சாப்பிடுகிறார். எல்லாவற்றுக்கும் சிசிடிவி வீடியோ ஆதாரம் இருக்கிறது.

முத்திரைத் தாள் மோசடி வழக்கில் சிக்கிய தெல்கிக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பான வீடியோ ஊடகங்களில் வெளியாகியுள்ளதே?

தெல்கியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு பிசியோதெரபி வசதி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவருக்கு சில வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் எங்களிடம் கோப்புகளும், ஆதாரங்களும் இருக்கின்றன. சந்தேகம் இருந்தால் நேரடியாக போய் சிறையை பார்த்துக்கொள்ளுங்கள்.

குறுகிய காலத்தில் சசிகலாவை நிறைய பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஆதாரத்துடன் வெளியாகி இருக்கிறதே?

சிறைத்துறை விதிமுறையின் படி 15 நாட்களுக்கு ஒரு முறைதான் ஒரு பார்வையாளர் சசிகலாவை சந்திக்க முடியும். அதன்படிதான் நாங்கள் தமிழக எம்பி, எம்எல்ஏ ஆகியோரை கூட அனுமதிக்கிறோம். தொடக்கத்தில் கைதியின் நலன் கருதி சிலரை கூடுதலாக அனுமதித்தோம். அதற்கு லஞ்சம் வாங்கவில்லை. நேர்மையான முறையில் அனுமதித்த‌தால்தான் நாங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியப்படுத்தினோம்.

டிஐஜி ரூபா கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானதா? அவருக்கும் உங்களுக்கும் தனிப்பட்ட முறையில் ஏதேனும் பகை உள்ளதா?

அனைத்தும் பொய்தான். என் மீது என்ன பகை என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு துறையில் குறை இருந்தால் உயர் அதிகாரியிடம் சொல்வார்கள். ஆனால் அவர் ஊடகங்களிடம் சொல்கிறார். அதன் மூலம் விளம்பரம் தேடுகிறார். சிறைத் துறையின் விதிமுறையை மீறிய தால் கடந்த இரு வாரங்களில் அவருக்கு 2 மெமோக்களை கொடுத்தேன். ஒருமுறை சிறையின் புகைப்படங்களை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட தற்காகவும் மறுமுறை முதல்வரின் கூட்டத்தை புறக்கணித்ததற்காக வும். இந்த இரண்டுக்கும் அவர் இன்னும் பதிலளிக்கவில்லை. ஆனால் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து கொண்டிருக்கிறார். முதல்வர் நோட்டீஸ் கொடுத்த பிறகும், தன் பேட்டியை அவர் நிறுத்தவில்லை.

டிஐஜி ரூபா இந்த விவகாரத்தில் தான் பழிவாங்கப்படுவதாக கூறி இருக்கிறாரே?

இல்லை. அது பொய்.

சசிகலா தமிழக சிறைக்கோ அல்லது வேறு சிறைக்கோ மாற்றப் படுவாரா?

அதை இப்போது சொல்ல முடியாது. சசிகலா விரும்பினால் தமிழக சிறைக்கு மாற்றுவது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடலாம். கர்நாடகாவில் வேறு சிறைக்கு மாற்றுவது தொடர்பாக இப்போது எந்த திட்டமும் இல்லை.

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV