இலங்கை செய்திகள்

கமநல சேவை அலுவலங்களுக்கு முன்னால் போராட்டம்

13 Oct 2021

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள  சகல கமநல சேவை அலுவலங்களுக்கு முன்னால்,  எதிர்வரும் திங்கட்கிழமை, போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக,  தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில், இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள விவசாயிகள், உரத்தைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளனர் எனவும், குறிப்பாக தென் பகுதியிலும் இந்த பிரச்சினையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் அங்கும் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா தொற்று காரணமாக, மக்கள் ஓரிடத்தில் ஒன்று சேர்வது நல்ல விடயம் அல்ல எனத் தெரிவித்த அவர்,  அது சமூகப் பொறுப்புக்கும் மாறானது என்பதை கருத்தில் கொண்டு,  வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து கமநல சேவைத் திணைக்களங்களுக்கும்  முன்னால், குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் மாத்திரம் ஒரே நேரத்தில் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதென தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கள் கிழமையன்று, காலை 9 மணிக்கு,  சமூக இடைவெளியை பின்பற்றி இப்போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam