கனடா செய்திகள்

கத்தலின் வின் தலைமையிலான குழு ஒன்று அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது

17 Feb 2017

ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் தலைமையிலான குழு ஒன்று அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை அடுத்து, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய நிர்வாகத்தின் நடவடிக்கைகள் அமெரிக்கா கனடா இடையேயான வர்த்தக நலன்கள் தொடர்பில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே ஒன்ராறியோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பொருளாதார வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் தலைமையிலான  குழு  ஒன்று அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்த பயணம் தொடர்பான அறிவிப்பை நேற்று முன்தினம் வெளியிட்ட ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின், இந்த அமெரிக்க பயணம் அடுத்த மாதம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தின் அதிகாரிகளையும், அமெரிக்க வர்த்தக பிரமுகர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் விபரம் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கான கனேடிய தூதரை நேற்று முன்தினம் சந்தித்து கலந்துரையாடிய  நிலையிலேயே ஒன்ராறியோவின் முதல்வர் அமெரிக்காவிற்கான தமது இந்த பயணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை அமெரிக்காவுக்கு பல்வேறு வகையிலும் ஒன்ராறியோ எவ்வளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக  காணப்படுகின்றது என்பது தொடர்பில் அமெரிக்கா செல்லும் இந்த குழு அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் 20 மாகாணங்களுக்குமான முக்கிய ஏற்றுமதிச் சந்தையாக விளங்கும் ஒன்ராறியோவுக்கும்  அமெரிக்காவுக்கும் இடையே நாளாந்தம் 800 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பரிமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்