இலங்கை செய்திகள்

சனிக்கிழமை நடைபெறவுள்ள கச்சதீவு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

14 Mar 2019

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நாளை மறுதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக விழா ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகம், ஆலய பங்குத்தந்தை, நெடுந்தீவு பிரதேச செயலகம் ஆகியவற்றுடன் இலங்கை கடற்படையினரும் இணைந்து விழாவிற்கான ஏற்பாடுகளை செவ்வனே நிறைவேற்றியுள்ளனர்.

இம்முறை திருவிழாவுக்கு யாழ்ப்பாணம் உள்ளடங்கலாக இலங்கையின் பல பாகங்களில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆலய திருவிழாவில் கலந்துகொள்ள விரும்பும் இலங்கை பக்தர்களுக்கான படகு சேவைகள் நாளை அதிகாலை 4.30 மணி தொடக்கம் பகல் 10.30 மணி வரையில் இடம்பெறும். குறிகட்டுவானில் இருந்து கச்சதீவுக்கான ஒரு வழி பயண கட்டணமாக 325 ரூபாய் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கான உணவு வசதிகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்படும். அத்தோடு, பலநோக்கு கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் கடைகளும் இயங்கவுள்ளன. இதேவேளை, இந்தியாவிலிருந்து வருகைதரும் பக்தர்களுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்