கனடா செய்திகள்

ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் புதிய தலைவராக டக் ஃபோர்ட் தெரிவு

12 Mar 2018

ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் புதிய தலைவராக டக் ஃபோர்ட் (Doug Ford) தெரிவு செய்யப்பட்டுள்ளார். மிக நீண்ட நேர இழுபறியின் பின் வெற்றி பெற்றவர் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிறிஸ்டீன் எலியோட், வழக்கறிஞரும் வர்த்தகருமான கரோலைன் முல்ரோனி, முன்னாள் ரொரன்ரோ நகரசபை உறுப்பினர் டக் ஃபோர்ட், பெற்றோர் உரிமைகள் செயற்பாட்டாளர் தான்யா கிரானிக் அலென் ஆகிய நான்கு பேர் போட்டியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுகளும், தற்போதய சம்பவங்களும், தாங்கள் இன்னமும் நிறையவே பணியாற்ற வேண்டியுள்ளது என்பதனை தெளிவாக எடுத்துக் கூறுவதாக ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் புதிய தலைவராக வெற்றி பெற்றுள்ள டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர், கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு கூறியுள்ள அவர், வரவுள்ள மாகாண சட்டமன்ற தேர்தலுக்கு முன்னராக நிறையவே பணிகளை ஆற்ற வேண்டியுள்ளதாகவும், சவால்கள் நிறையவே உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்ராறியோ மாநிலம் சட்டமன்றத்திற்கான தேர்தலை விரைவில் எதிர்கொள்ள உள்ள நிலையில், ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் புதிய தலைவராக டக் ஃபோர்ட் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவராக இருந்த பற்றிக் பிறவுண் பாலியல் குற்றச்சாட்டை எதிர்கொண்ட நிலையில், அவர் அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அதேவேளை, அந்த பதவியிலிருந்து விலகினார்.

இதனை அடுத்து புதிய தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் டக் ஃபோர்ட் உள்ளிட்ட நான்கு பேர் போட்டியிட்டனர்.

இவர்களில் புதிய தலைவர் யார் என்பதைத் தெரிவு செய்வதற்கான வாக்கு பதிவு கடந்த 2ஆம் திகதி தொடங்கி  சனிக்கிழமை மதியம் வரையில் தொடர்ந்த நிலையில், முடிவுகள் நேற்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட ஏழரை மணிநேர தாமதத்தின் பின்னர் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதலாவது சுற்றில் டக் ஃபோர்ட்டுக்கும் கிறிஸ்டீன் எலியோட்டுக்கும் இடையேயான வித்தியாசம் மிகவும் குறைவாக காணப்பட்ட நிலையில், இரண்டாம், மூன்றாம், மற்றும் இறுதிச் சுற்றுகளில் டக் ஃபோர்ட் வெற்றிபெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இறுதிச் சுற்று முடிவுகளின்படி, டக் ஃபோர்ட்டை விடவும் கிறிஸ்டீன் எலியோட் 153 புள்ளிகள் குறைவாக பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சி இந்த முடிவினை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள போதிலும், கட்சித் தலைமைக்கு போட்டியிட்டவர்களில் ஒருவரான கிறிஸ்டீன் எலியோட், இந்த தேர்தல் வாக்களிப்பு முறைமையில் கடுமையான முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன், அவை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV