விளையாட்டு செய்திகள்

ஐ.பி.எல். கிரிக்கெட்: அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்குமா கொல்கத்தா..?

14 May 2022

முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. நட்சத்திர வீரர்களை அதிகம் கொண்டுள்ள கொல்கத்தா அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நிலையற்ற தன்மையுடன் விளங்குவதால் தடுமாறி வருகிறது. அந்த அணி தனது எஞ்சிய 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பீல் நீடிக்க முடியும். 


இதனால் இன்றைய ஆட்டம் கொல்கத்தா அணிக்கு வாழ்வா-சாவா போராட்டமாகும். கொல்கத்தா அணி தனது முந்தைய லீக் ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்திய உத்வேகத்துடன் களம் இறங்குகிறது. தசைப்பிடிப்பு காரணமாக கடந்த ஆட்டத்தில் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் அய்யர் (336 ரன்கள்) , நிதிஷ் ராணா, ஆந்த்ரே ரஸ்செல், வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங்கும், பந்து வீச்சில் உமேஷ் யாதவ் (15 விக்கெட்), ஆந்த்ரே ரஸ்செல், டிம் சவுதி, சுனில் நரின், வருண் சக்ரவர்த்தியும் வலுசேர்க்கிறார்கள்.

கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் 11 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டியது அவசியமானதாகும். முதல் 2 லீக் ஆட்டங்களில் தோல்வியும் அடுத்த 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றியும் பெற்ற அந்த அணி தனது முந்தைய 4 ஆட்டங்களில் (குஜராத், சென்னை, டெல்லி, பெங்களூரு அணிகளிடம்) அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து நெருக்கடியில் உள்ளது. சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் ஆகியோர் கடந்த சில ஆட்டங்களில் ஆட முடியாமல் போனதும், அதிவேகமாக பந்து வீசும் உம்ரான் மாலிக் பந்து வீச்சு எதிர்பார்த்தபடி எடுபடாததும் அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. 

காயத்தால் கடந்த 2 ஆட்டங்களை தவற விட்ட நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இந்த ஆட்டத்தில் களம் திரும்புவார்கள் என்று அந்த அணியின் பயிற்சியாளர் டாம் மூடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐதராபாத் அணியின் பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா (331 ரன்கள்), மார்க்ராம், ராகுல் திரிபாதி, நிகோலஸ் பூரன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கில் இன்னும் நல்ல பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் நடராஜன், உம்ரான் மாலிக், புவனேஷ்வர்குமார் ஆகியோர் மிரட்டக்கூடியவர்கள்.

கொல்கத்தாவுக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் இந்த ஆட்டத்தை எதிர்கொள்ளும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க கொல்கத்தா அணி போராடும். அடுத்த சுற்று வாய்ப்பை நிர்ணயிக்கும் போராட்ட களமாக இருக்கும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது எனலாம்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam