உலகம் செய்திகள்

ஐஸ்கிரீம் விளம்பரத்தால் சர்ச்சை... விளம்பர படங்களில் பெண்கள் தோன்றுவதற்கு தடை விதித்த ஈரான் அரசு

06 Aug 2022

ஈரான் நாட்டில் கடந்த 1979 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு, அந்நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. சமீப காலமாக சமூக வலைதளங்கள் மூலமாகவும், பொது இடங்களில் ஹிஜாபை அகற்றியும் சிலர் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் மீது ஈரான் அரசு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் ஈரானில் அண்மையில் வெளியான ஐஸ்கிரீம் விளம்பரம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஈரானைச் சேர்ந்த ஐஸ்கிரீம் நிறுவனமான 'டோமினோ' இரண்டு விளம்பரங்களை வெளியிட்டது. அதில் ஒரு பெண் சற்று தளர்வாக ஹிஜாப் அணிந்தபடி ஐஸ்கிரீமை கடிப்பது போன்றும், மற்றொரு விளம்பரத்தில் ஐஸ்கிரீம் நிறத்திற்கு ஏற்றவாறு அந்த பெண்ணின் உடை அலங்காரம் இருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

இந்த விளம்பரங்கள் ஈரானின் பொது கண்ணியத்திற்கு எதிரானது என்றும், பெண்களின் மதிப்புகளை அவமதிப்பதாக இருப்பதாகவும் ஈரானிய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரானின் கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சகம், அந்நாட்டின் கலை மற்றும் சினிமா பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஹிஜாப் மற்றும் கற்பு விதிகளை அவமதித்த காரணத்தால் பெண்கள் இனி விளம்பரங்களில் தோன்ற அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த உத்தரவு கலாச்சார புரட்சியின் சுப்ரீம் கவுன்சில் வழங்கிய தீர்ப்புகளுக்குள் அடங்கும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வர்த்தக விளம்படங்கள் தொடர்பான ஈரான் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் இந்த தடை பொருந்தும் என்றும், இது பெண்கள் மட்டுமின்றி குழந்தைகள் மற்றும் ஆண்களை கருவிகளாக உபயோகிப்பதை தடை செய்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam