இந்தியா செய்திகள்

எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டேன்: கர்நாடக சிறை டிஐஜி ரூபா திட்டவட்டம்

16 Jul 2017

பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிரடியாக 2 முறை சோதனை நடத்தினேன். சிறையின் அத்தனை இடங்களையும் அலசி ஆராய்ந்த தில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவந்தன. அந்த தகவல்களை எனது உயர் அதிகாரியிடம் சொன்னேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாததால் கடந்த வாரம் எழுத்துப்பூர்வமாக அனுப்பினேன். அந்த கடிதம் எப்படியோ ஊடகங்களில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

சசிகலாவுக்கு விவிஐபி வசதி, நவீன சமையலறை, உணவு, உதவியாளர்கள் என பல வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அது தொடர்பாக 2 அறிக்கைகளை சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயண ராவுக்கு அனுப்பி விட்டேன். சசிகலாவுக்கு எந்த வசதியும், சலுகையும் அளிக்கப் படவில்லை என டிஜிபி சொல்வ தற்கு பதிலளிக்க விரும்பவில்லை. நான் சிறையை நேரில் பார்வையிட்டு 2 அறிக்கைகளை கொடுத்திருக்கிறேன். அதன்படி விசாரணை நடக்கட்டும். யார் சொல்வது உண்மை என தெரியும். இதை நாம் பேசிக்கொண்டிருக்கும்போது சிறையில் உள்ள தெல்கி அறையின் வசதிகளை காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். சசிகலா பார்வையாளர்களை சந்தித்த அறையில் சிசிடிவி கேமரா இல்லை. குறிப்பாக சசிகலா, தெல்கி உள்ளிட்ட விவிஐபி வசதி அனுபவிக்கும் கைதிகளின் அறையில் இருந்த நவீன வசதிகளை காவலர் மூலமாக ஹேண்ட் கேமிராவில் வீடியோ எடுத்தேன். இந்த வீடியோவை எனக்கு மின்னஞ்சல் அனுப்பும்படி கூறினேன். ஆனால் அதிகாரிகள் அனுப்பவில்லை. மறுநாள் என் பென்டிரைவில் காப்பி செய்து தருமாறு கேட்டேன். அவர்கள் காப்பி செய்து கொடுத்த பென்டிரைவில் இருந்த ஃபோல்டரில் ஒன்றில்கூட வீடியோ இல்லை. புகைப்படமும் இல்லை. எல்லாவற்றையும் அதிகாரிகளே திட்டமிட்டு அழித்துள்ளனர். ஆனால் அதையெல்லாம் தாண்டி சில ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. சசிகலாவிடம் ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கியதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேள்வி எழுப்புகிறார்கள். அதை ஊடகங்களிடம் சொல்ல முடியாது. விசாரணைக் குழுவிடம் சொல்வேன். நான் தாக்கல் செய்யும் ஆதாரம் உண்மையென நிரூபிக்கப்பட்டால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

சசிகலா விவகாரத்தால் என் தொலைபேசிக்கும், சமூக வலைதள பக்கங்களுக்கும் சில மிரட்டல்கள் வந்திருக்கின்றன. அலுவலக ரீதியாக சில அழுத்தங்கள், நெருக்கடிகள் வரும் என நண்பர்கள் எச்சரிக்கிறார்கள். நான் எதையும் கண்டு அஞ்ச மாட்டேன். ஓர் அதிகாரியாக இதை யெல்லாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். அதே நேரத்தில் கிரண்பேடி போன்ற மூத்த அதிகாரிகள் என்னை வாழ்த்துவது, மிகப் பெரிய உந்து சக்தியை கொடுத்திருக்கிறது. உயர்நிலைக் குழு எனது அறிக்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டால், சிறைத்துறையில் நல்ல மாற்றங் கள் வரும் என நம்புகிறேன்.

 

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV