இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு

24 Nov 2021

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பில் பிரதிவாதிகள் 25 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயம் எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதிக்கு  ஒத்திவைத்தது.

இந்த வழக்கு நீதியரசர்களான தமித் தோட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோரடங்கிய தீர்ப்பாயம் முன்னிலையில் நேற்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்போது நவ்பர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

நௌபர் மௌலவி, சஜித் மௌலவி, மொஹமட் மில்ஹான், சாதிக் அப்துல்லா, ஆதம் லெப்பை, மொஹமட் சனாஸ்தீன் மற்றும் மொஹமட் ரிஸ்வான் உட்பட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் முன்னர் தாக்கல் செய்யப்பட்டதுடன், ஒக்டோபர் 4ஆம் திகதி குற்றப்பத்திரிகையும் வாசிக்கப்பட்டது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் கொலைக்கு சதி செய்தல், உதவி செய்தல், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சேகரித்தல் மற்றும் கொலை முயற்சி ஆகியவை அடங்குகின்றன.

ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புடைய உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத்தைச் சேர்ந்த ஒன்பது தற்கொலை குண்டுதாரிகள், இலங்கையின் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று நடத்திய தொடர் குண்டுவெடிப்பில் 270 பேர் கொல்லப்பட்டதுடன், 500இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam