இந்தியா செய்திகள்

உடற்பயிற்சியில் வேகம் காட்டும் ஸ்டாலின்

01 Nov 2017

தந்தையின் ஓய்வுக்குப் பின் கட்சியை அதே கட்டுக்கோப்போடு நடத்திச்செல்லும் ஸ்டாலின் சரியான தலைமை என்று நிரூபித்து வருகிறார். அரசியல் தலைவர்களில் பளிச்சென்ற தோற்றத்துக்கும் சுறுசுறுப்புக்கும் பெயர் போனவர் என எம்ஜிஆர் மற்றும் வைகோவை சொல்வார்கள். தற்போது அந்த இடத்திற்கு மு.க.ஸ்டாலினும் தன்னை உயர்த்தி வருகிறார்.

உடலைப் பேணுவதிலும், உடை விஷயத்திலும் மு.க.ஸ்டாலின் தனக்கென சில பாணிகளை கடைபிடித்து வருகிறார். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் கிருக்கும் மு.க.ஸ்டாலின் 65 வயதைக் கடந்தவர் என்று சொன்னால் அவர் தோற்றத்தை வைத்து நம்புவது சற்று கடினம்தான். கடந்த சில ஆண்டுகளாக யோகா பயிற்சி மற்றும் நடைப்பயிற்சியை மேற்கொண்டு வரும் ஸ்டாலின் இளமையான தோற்றத்துடன் இருக்கிறார்.

தற்போது இளமையான தோற்றத்தை மேலும் வலுவாக்க உடற்பயிற்சியிலும் ஈடுபட துவங்கியுள்ளார். இது தொண்டர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு செயலாகும்.

மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ காட்சிகள் வைரலாவதை அடுத்து இது குறித்து விசாரித்த போது அவர் உடற்பயிற்சி கருவிகள் மூலம் பயிற்சி செய்வது உண்மைதான் என்று தெரிவித்தனர். தனது வீட்டில் மேல் தளத்தில் நவீன உடற்பயிற்சிக் கூடத்தை அமைத்துள்ள மு.க.ஸ்டாலின் தனது அன்றாட அரசியல் பணிகளுக்கிடையே ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய தவறுவது இல்லையாம்.இதற்காக தனி பயிற்றுநர் ஒருவர் உடனிருக்க உடற்பயிற்சி மேற்கொள்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின் உடற்பயிற்சியில் ஈடுப்பட்டிருப்பது குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது;

''பொதுவாக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் ஆர்வம் உள்ளவர். தனது தந்தையைப் போலவே குறைவாக உண்பவர். எந்த இடத்திலும் உணவு விஷயத்தில் அவரை நிர்பந்திக்க முடியாது. அவ்வளவு கட்டுப்பாடாக இருப்பார். அதே போல் பல ஆண்டுகளாக நடைப்பயிற்சி செய்து வருகிறார், யோகாவும் செய்து வருகிறார்.

தற்போது கருவிகளை வைத்து உடற்பயிற்சி செய்ய துவங்கி உள்ளார். அவர் உடல் தோற்றத்திற்கு இதை செய்துதான் ஆக வேண்டும் என்பது இல்லை இப்போதே ஜம்மென்றுதான் இருக்கிறார். இருந்தாலும் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவர் எந்த செயலை செய்தாலும் அதில் ஒரு ஒழுங்கை எதிர்பார்ப்பார். நேரம் தவறாமையை சரியாக கடை பிடிப்பார். ஆகவே உடற்பயிற்சியிலும் அவர் அதை செய்வார். அவர் உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பாக மாறுவது அவருடைய நலனுக்கு மட்டுமல்ல தமிழக அரசியலுக்கும் தேவை'' என்று துரைமுருகன் கூறினார்.

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV