உலகம் செய்திகள்

ஈரானில் விமானம் மலையில் மோதி 11 பேர் சாவு

13 Mar 2018

துருக்கி நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் மாலை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து, துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் விமானி உள்பட 11 பேர் இருந்தனர்.

இந்த விமானம் நேற்று முன்தினம் இரவு ஈரான் நாட்டின் சஹர்மகால் மாகாணத்தில் உள்ள சஹர்-இ-கோர்ட் என்ற இடத்துக்கு அருகே மலைப்பாங்கான பகுதியில் பறந்து கொண்டிருந்தது.

அப்போது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், அங்கிருந்த ஒரு மலை மீது மோதி, தீப்பிடித்தது. இந்த கோரவிபத்தில் விமானத்தில் இருந்த 11 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர்.

மலை அடிவாரத்தில் பெரிய அளவில் தீ எரிவதை கண்ட உள்ளூர் மக்கள் அங்கு சென்றுபார்த்தனர். அப்போது விமானத்தின் சிதைவுகளுக்கு இடையே 11 பேர் அடையாளம் காண முடியாத அளவுக்கு கரிக்கட்டைகளாக கிடந்தனர்.

பொதுமக்கள் இதுகுறித்து, மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அவர்கள் 11 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

துருக்கி நாட்டைச் சேர்ந்த மினா என்ற கோடீசுவர பெண்ணுக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருந்தது. இதையொட்டி அவர் தனது தோழிகளுடன் துபாயில் ஒரு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு திருப்பும்போது விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. விபத்தில் மினாவும், அவரது தோழிகள் 7 பேரும், விமான சிப்பந்திகள் 3 பேரும் பலியாகிவிட்டனர்.

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்