இலங்கை செய்திகள்

இலங்கைக்கு விசேட கண்காணிப்பு விமானம் ஒன்றை இந்தியா வழங்குகின்றது

16 Apr 2019

விசேட கண்காணிப்பு விமானம் ஒன்றை இலங்கைக்கு வழங்க இந்தியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்திற்கொண்டே இந்த கண்கானிப்பு விமானத்தை இந்தியா வழங்கவுள்ளது.

இலங்கை மட்டுமல்லாது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளுடனும், சிறந்த பாதுகாப்பு உறவை பேணுவது இந்தியாவின் விருப்பம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கி வரும் நிலையில், இலங்கை உள்ளிட்ட பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் சிறந்த பாதுகாப்பு உறவை பேண விரும்புவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

இதற்கமைவாகவே, ஜேர்மனியின் அனுமதிபத்திரம் பெற்ற இந்திய தயாரிப்பான டோனியர் ரக விமானத்தை இலங்கைக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விமானத்தின் மூலம், சமூத்திர மற்றும் கடலோர பாதுகாப்பு பணிகளை திறம்பட முன்னெடுக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் அண்மையில் இந்திய படைகள் இலங்கை படைகளுடன் இணைந்து கூட்டு இராணுவ பயிற்சிகளை நடத்தியிருந்தனர்.

அத்துடன், புத்தகயா மற்றும் லும்பினி முதலான வழிபாட்டு தளங்களுக்கு இலங்கை இராணுவத்தினர் சென்றுவர விசேட அனுமதி வழங்கவும் இந்தியா நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்