26 May 2023
இராணுவ மயமாக்கல் தற்போது பௌத்த மயமாக்கலாக மாறி வருகின்றது என்றும், தமிழரின் இன விகிதாசாரத்தை வடக்கு, கிழக்கில் குறைக்கும் முயற்சியையும் அவசரமாக நிறுத்த வேண்டும் என்று ஆட்சியாளர்களை கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற நிதி அமைச்சின் கட்டளைச் சட்டங்கங்கள்
தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும்
தெரிவிக்கையில், “யுத்தம் முடிவடைந்துள்ள எங்களின் பிரதேசத்தில் யுத்தம் நடைபெறுவதை போன்று இராணுவ மயமாக்கல் காணப்படுகின்றது. வீதிகள், அரச நிலங்கள் என எல்லா இடங்களிலும் படையினர் இருக்கின்றனர்.
அவ்வாறு இருந்துகொண்டு இராணுவ முகாம்களில் அவசர அவசரமாக புத்தரின் சிலைகள் மற்றும் பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு முயற்சிக்கின்றனர். இராணுவ மயமாக்கல் பௌத்த மயமாக்கலாக மாறியுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற சிறப்புரிமைகளையும் மீறி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா
கஜேந்திரனை கைது செய்துள்ளனர். தனியார் காணியில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டதை
ஜனநாயக ரீதியில் போராடிய நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்வதென்றால் சட்டம்,
பல்லிண மக்கள் அற்ற நாடாகதான் இந்த நாட்டை பார்க்க வேண்டியுள்ளது.
ஓர் இனம் இன்னுமோர் இனத்தையும், ஒரு மதம் இன்னுமொரு மதத்தையும் அடக்கி ஆளும்
வகையிலேயே ஆட்சியாளர்கள் செயற்படுகின்றனர்.
இவ்வாறாக இராணுவ மயமாக்கல் மூலம் பெளத்த மயமாக்கலையும், மகாவலி அதிகார சபையின் மூலம் இனப்பரம்பலை வடக்கு, கிழக்கில் திணிப்பதையும், தமிழரின் இன விகிதாசாரத்தை வடக்கு, கிழக்கில் குறைக்கும் முயற்சியையும் அவசரமாக நிறுத்த வேண்டும் வேண்டும். அரசாங்கமும், ஜனாதிபதியும் இந்த விடயத்தில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்” என்றும் கூறினார்.