இலங்கை செய்திகள்

இராஜதந்திரிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை

11 Feb 2019

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 வது கூட்டத்தொடர் எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனேடியத் தூதுவரின் தலைமையில் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு சந்தித்துப் பேசவுள்ளது.

இதன்போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில், பேரவையின் 30/1, 34/1 தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம், நடவடிக்கை எடுக்காதமை குறித்தும், இவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராயப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதுவரையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை முன்வைத்து வந்த அமெரிக்கா, தற்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்காத நிலையில், கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் ஒன்றே அந்தப் பணியை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே கனடியத் தூதுவரின் தலைமையிலான இராஜதந்திரிகளை ஒரே இடத்தில் சந்திக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. அத்துடன், இம்முறை ஜெனிவா கூட்டத்தொடருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது பிரதிநிதிகளை அனுப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்