இந்தியா செய்திகள்

இன்று முதல் 26-ந் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு

23 Jun 2022

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 26-ந் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில், வடக்கு கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை முதல் 26-ந் தேதி வரை லட்சத்தீவு பகுதி, கேரளா-கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீன்பிடிக்க செல்ல வேண்டாம்

எனவே, மேற்கண்ட தினங்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதே நேரத்தில், குமரி கடல் பகுதி, தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நேற்று மதியம் 12 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவின்படி, திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் அதிகபட்சமாக 8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இதே போன்று, சென்னை மாவட்டம் தண்டையார் பேட்டை, கலெக்டர் அலுவலகம், பெரம்பூர், எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் தலா 7 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, செங்குன்றம் பகுதிகளில் தலா 6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இதே போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam