வரலாறு செய்திகள்

இனவழிப்பின் சாட்சியம் குருதிச் சுவடுகள்

21 May 2021

உலக வரலாற்றில் மனிதகுலம் பல்லாயிரம் போர்க்களங்களைக் கண்டிருக்கிறது. எந்த வொரு நாட்டில் மக்கள் இராணுவ அடக்கு முறைக்குள் ஆளப்படுகின்றனரோ, அங்கெல்லாம் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். இது உலக நியதி இதனை மாற்ற முடியாது. ஒவ்வொரு போரும் ஒவ்வொரு வகையான செய்திகளை இந்த உலகிற்கு சொல்லிச் சென்றிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாதிகள் என்று இந்த உலகம் சொல்லுவது – முழுத் தமிழ்த் தேசிய இனத்தையுமே பயங்கரவாதிகள் என்று சொல்லிச் சிறுமைப்படுத்துவது போன்றதாகும்.

விடுதலைப் புலிகள், இன விடுதலைக்காக போராடியவர்கள்.  தன்னாட்சி மரபுவழித் தாயகம் தமிழ்த் தேசியம் இயக்க ஒழுக்கம் சாதிபேதமற்ற சமூகம் சம பெண் உரிமைகள் சமய சார்பின்மை தனித்துவமான சமவுடமை கொள்கைகள் கொண்டு போராடுகின்ற ஒரு மக்கள் இனத்தின் பிரதிநிதிகள். விடுதலைப் புலிகள் எமது இனத்தின் சுதந்திரப் போராளிகள் என்பதை நாங்கள் வெளிப்படையாக இந்த உலகத்திற்குச் சொல்லிவிட வேண்டும்.

இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமை, அபிலாஷை மற்றும் தனித்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கொள்கையாகும். சமூக ரீதியான பிராந்திய அரசியல், குறிப்பாக தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகளை முன்னுரிமைப் படுத்துவதற்குரியது. பேரினவாத அரசையும் அதன் சிங்கள பௌத்த கோட்பாட்டையும் தகர்த்திட ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் உரிமைக்கான போராட்ட சக்கியாக நின்று இனத்தின் இருப்புக்காக தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை வேண்டிப் போராடிய ஆயிரமாயிரம் போராளிகளும், அவர்களுக்குப் பலமாகவும் அரணாகவும் நின்று சர்வதேசத்திடம் நீதி கேட்ட பொதுமக்களும், சாட்சியமில்லாத யுத்தத்தில் வகைதொகையின்றி இளையோர் – முதியோர் – சிறுவர் – பாலகர் என்ற பேதமின்றி ஏன் கொல்லப்பட போர்முனை, படுகொலையின்  நடுகல்லாக  விளங்குகிறது முள்ளிவாய்க்கால்.

இன அழிப்பு என்பது, மனிதக் குலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் மிக மோசமான அல்லது கொடூரமான குற்றச் செயல் தமிழர் தேசம் ஆண்டாண்டு காலமாக தொடர்ச்சியாக சிங்கள தேசத்தின் இனவழிப்பிற்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகிக்கொண்டே வருகின்றது. 1958 ஆம் ஆண்டுகளில் தொடக்கப்பட்ட தமிழர் இனப்படுகொலை 1983 களில் வீச்சாகி 2009 களில் அதன் உச்சக்கட்டமாக 2006ம் ஆண்டு ஆரம்பித்த ஆக்கிரமிப்பு 2009ம் ஆண்டு அதியுச்சம் பெற்றது. இந்த இறுதியுத்தத்தின் போது 1,47,679 பொது மக்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதை மறைந்த ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் அவர்கள் புள்ளிவிபரங்கள் மூலம் ஆதார பூர்வமாக நிறுவினார். சுடர் விட்டு பிரகாசித்த எமது தாய்நிலம் புதிய நூற்றாண்டின் கொடிய இனவழிப்பின் சாட்சியாய் பேரழிவுகளை எதிர்கொண்டு பன்னிரு வருடங்கள்  உருண்டோடிவிட்டன.

சிங்கள பௌத்த மதவெறி பிடித்த பேரினவாதிகள் உலகம் எந்த ஆயுதங்களை எல்லாம் தடைசெய்து வைத்திருந்ததோ, அதை எல்லாம் பயன்படுத்தி தமிழர்களை அழித்தார்கள். இரசாயனக் குண்டுகளை வீசினார்கள். செத்து விழுந்தவரின் உடல்கள் அனைத்தும் கருகின. வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசினார்கள். கொத்துக் குண்டுகளை கொத்து கொத்தாக   வீசினார்கள். போர்க் காலங்களில் மருத்துவமனைகள், மத வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக் கூடங்களில் குண்டு வீசக் கூடாது. ஆனால், அவை மீது தான் குண்டுகளை வீசினார்கள். போர்க்காலங்களில் ‘பாதுகாப்பு  வலையங்கள் உருவாக்கி, அங்கு இருக்கும் மக்களைப் பாதுகாப்பார்கள். உலகத்தில் எங்கும் நடக்காத வகையில் பாதுகாப்பு வலையங்களின் மீதே குண்டுகளை வீசிய எம் இனம் நாளாந்தம் அழித்தொழிக்கப்பட்ட குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள் என மக்கள் சந்தித்த அவல வாழ்வு மறக்க முடியாதவை.  கரும் புகை சூழ்ந்து கருகிப் போன மரணங்களின் கண்கண்ட காட்சிகளையும் என் மனதில்  ஏற்பட்ட  உணர்வுளையும்  தாங்கி  வருகிறது குருதிச் சுவடுகள் நூல்.

வன்னியின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இடம் பெயர்ந்து வட்டக்கச்சி, முரசுமோட்டையிலிருந்து வெலிக்கண்டல், புளியம்பொக்கணை, இருட்டுமடு, ஒலுமடு, தர்மபுரம், நெத்தலியாறு, சுண்டிக்குளம், கல்லாறு, விசுவமடு, தொட்டியடி, பன்னிரண்டாம்கட்டை, ரெட்பானா, பிரமந்தனாறு, தேராவில், உடையார்கட்டு, வள்ளிபுரம், சுதந்திரபுரம், கைவேலி, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை மற்றும் முள்ளியவளை, வற்றாப்பளை  முல்லைத்தீவின் கடற்கரைக் கிராமங்களான புதுமாத்தளன், பழைய மாத்தளன், இடைக்காடு, அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், பனையடி, சாளம்பன், முள்ளிவாய்க்கால் மேற்கு, கிழக்கு என அங்கே ஒவ்வொரு கிராமங்களிலும் வீதிகளிலும் செறிவாகப் பொதுமக்கள் வாழ்ந்த பகுதிகள் மீது சிறிலங்காப் படையினர் பரவலான எறிகணைத் தாக்குதல்களையும் விமானத் தாக்குதல்களையும் நிகழ்த்தி பொதுமக்களைக் கொல்லுகின்ற வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்தப் பிரதேசங்களில் மக்கள் நிலைகள் மீது சிறிலங்காப் படையினர் கண்மூடித்தனமாக எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டபோதிலும், சற்று இடவசதி இருந்ததாலும் பொதுமக்கள் பதுங்குகுழிக்குள் காப்பெடுத்துக் கொண்டதாலும் உயிரிழப்பு ஏற்பட்ட மக்களின் சுவடுகளை கண்முன் கொண்டு வருகிறது குருதிச் சுவடுகள் நூல்.

தமிழர் தாயக நிலப்பரப்பில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள்  இருப்பிடங்களை விட்டுவெளியேறி, உடைமைகளைத் துறந்து சொந்த நாட்டிலேயே வனாந்திரங்களில் குடியிருப்புக்களை  உருவாக்கி வாழ்க்கை நடாத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். பதுங்கு குழிகளுக்குள் பாதுகாப்புத் தேடி பதுங்கியிருந்த மக்கள்  மீது குண்டுகள் வீழ்ந்து வெடித்து பலர் அவற்றிற்குள்  மூடுண்டும் கொல்லப்பட்ட பெரும் மனிதப்  பேரவலம்.  பாதுகாப்பு வலயம் என்ற  அகதி முகாம்களின்மீதும் சிங்கள இராணுவம்  கண்மூடித்தனமாக  குண்டுகளை வீசினார்கள். தாக்குதலுக்கு அஞ்சி சிதறி ஓடிய மக்கள் மீது தொடர்ந்து குண்டுகள் வீழ்ந்து வெடித்தது. தெருத் தெருவாக தமிழர்கள் கொல்லப்படுவதுடன் பல நூற்றுக்கணக்கான அவர்களது உடலங்கள் அந்த அந்த இடங்களிலேயே குவியல் குவியலாகக் குவிக்கப்பட்ட அவலத்தின் சுவடு  குருதிச் சுவடுகள்.

பீரங்கிக் குண்டுச் சிதறல்களினாலும் இரசாயனத் திரவங்களாலும் படுகாயமடைந்தும் உடல் அவயவங்களை இழந்தும் கொதிக்கும் எரிகாயங்களுடனும் ஆயிரக்கணக்கானவர்கள் தெருத் தெருவாகவும் பதுங்கு குழிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் அப்படி அப்படியே கிடந்து கதறிட இவர்களைத் தூக்கி எடுக்கவோ சிகிச்சைகள் அழிக்கவோ  முடியாத நிலையில் இனப்படுகொலை நிகழ்த்திட  உணவுப் பொருட்களையும் மருந்து பொருட்களையும் இலக்குவைத்து அழித்திட்ட இனப்படுகொலை உச்சத்தை குருதிச் சுவடுகள் நூல் பதிவிடுகிறது.

தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், அவர்களின் சொத்துகளை அழித்தும் பொருள்களைக் கைப்பற்றியும், பல்லாயிரக்கணக்கானோரைப் படுகொலை செய்தும் பல அடக்குமுறைகளை நிகழ்த்திய சிங்கள இனவாதிகள். 2009 முள்ளிக்குளம் தொடக்கம் முள்ளிவாய்க்கால், நந்திக்கடல், வட்டுவாகல்  பகுதிகள் வரை வானைப்பிளக்கின்ற யுத்தச் சத்தங்கள், பூமியை இரத்தக்கறையாக்கியிருந்தன. தரையிலும் கடலிலும் உயிர்நீத்து வீழ்ந்துகிடந்த பலருடைய சடலங்களுக்கு மேலே, உயிர் தப்ப முயற்சித்த ஏராளமான மக்கள் , தங்கள் குழந்தைகள், உறவினர்களுடன் பதைபதைப்புடன் ஓடிய காட்சியின், மரணஓலங்களும் மறக்கமுடியாத வடுவாக இன்றும் மறையாமல் இருக்கின்றது.

ஒடுங்கிய நிலப் பிரதேசத்திற்குள் நெருக்கிச் சென்ற அரச படையினர், 3 இலட்சத்திற்கும் அதிகமான  மக்களை அகதிகளாகப் பிடித்து அடைத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமில் முட்கம்பி வேலிகளுக்கு நடுவே தடுத்து வைத்திட பல்லாயிரக்கணக்கானோர் அநாதைகள் ஆக்கப்பட்டும் படுகாயங்களைச் சந்தித்தும் தெருக்களிலும், முற்றங்களிலும்  குற்றுயிராகினர். யார் இறந்தார்கள் யார் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை யாராலும்  அடையாளப்படுத்த  முடியா  நிலையில் உறவுகளை இழந்து , உடல் அவயங்களை இழந்து , தமிழர்களில் இளைஞர்கள் , யுவதிகள் பிரித்தெடுக்கப்பட்டுப்  பொய்யான  குற்றச்சாட்டுக்களின்  கீழ் பேரினவாத சிங்கள இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டு மிகக் கொடுமையான சித்திரவதைகளுக்கும், படுகொலைகளுக்கும் ஆளாகிக் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.

இனப்படுகொலை அரசினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் முதல் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் சரண் அடைந்தவர்கள் வரை யாருக்கும் எந்த நீதியும் இதுவரை கிடைக்கவில்லை. பலர் அரசியல்  கைதிகள், பலர் ரகசியச் சிறைகளில், பலர் என்ன ஆனார்கள் என்று எந்தத் தகவலும் இது வரை கிடையாது. மக்களை தடுத்து வைத்திருந்த முகாம்களில் நடந்த கொடுமைகள் அதிகம். பல இளம் பெண்கள் கைது செய்யப்பட்டு சிங்கள இராணுவத்தின் முகாம்களில் பாலியல் வன்முறைக் கொடுமைகளுக்கு இரையாக்கப்பட்டுச் சிதைக்கப் பட்டவர்கள் என பட்டியல் நீண்டு செல்ல பௌத்த சிங்களப் பேரினவாதிகள் தொடர்ந்து தமிழின அழிப்பில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்து தமிழினக் குழந்தைகள் பிறப்பை திட்டமிட்டுத் தடுக்கப்படுகிறது. கருவுற்றிருக்கும் தமிழ்ப் பெண்களுக்குக் கட்டாயக் கருச்சிதைவு, கருத்தடை  போன்றவற்றை சிங்கள அரசு ஈவிரக்கமில்லாமல் செய்துவருகின்ற விடங்களைத் தாங்கி வருகிறது குருதிச் சுவடுகள்.

உடல் ,உள, பாலியல் ரீதியான  சித்திரவதைகளின் பின் விடுதலையான பலர் இன்னும் இராணுவக் கண்காணிப்பில் வாழ்கிறார்கள். கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களில் பலர் திடீர் திடீர் என்று மர்மமான மரணங்களும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்க் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, புத்த விகாரைகளில் வளர்க்கப் படுகின்றார்கள் அல்லது வெவ்வேறு இடங்களுக்குக் கடத்தப்பட்டு இன மத அடையாளத்தை மாற்றுகின்றார்கள். இதன்போது உளவியல் ரீதியில் பாதிப்புக்களை  உருவாக்கி நலவுற்ற ஒரு சமூகமாக உருவாக்கும் முயற்சியில் சிங்கள அரசுவெற்றியும் கண்டுள்ளது. இவை மட்டுமின்றி தமிழர்களின் இன விகிதாச்சாரத்தை அழித்து வடக்கு-கிழக்குப் பகுதியில் சிங்களக் குடியேற்றங்களைத் திட்டமிட்டு தொடர்ந்து  நிறுவிவருகின்றது.

யுத்தத்தின் பின்னர் தமிழ்ச் சமூகத்தின் கலாசார, பண்பாட்டு அமைதியும், இருப்பும் சிதைவடைந்து, பல்வேறு தரவாழ்க்கை நிலையில் வாழும் சமூகத்தின் பெண்கள், இளைஞர்கள், யுவதிகள், மத்தியில்  விரக்தியையும், வெறுமையையும், உளவியல் பாதிப்புக்களையும் ஏற்படுத்திய வண்ணமே உள்ளது. போருக்குப்பின் அடிப்படைத் தேவைகளான உணவு, மருத்துவம், கல்வி, உறைவிடம், நீர் முதலிய அடிப்படைவசதிகள் அனைத்தும் மக்களுக்கு  பூர்த்தி செய்வதற்கு  வழியின்றி காலத்துடன் போராட வேண்டிய நிலையில் தற்கொலை, கொலைகள், கொள்ளைகள், சிறுவர் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் ,விபச்சாரம், சிசுக்கொலைகள், விவாகரத்துகள், முறையற்ற திருமண உறவுகள், பரஸ்பர அவநம்பிக்கைகள், பாலியல் துன்புறுத்தல்கள்,    வாள்வெட்டு வன்முறைகள், ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள்,  சட்ட விதிமுறைகளை  மதிக்காமை, வாகன விபத்துக்கள், கணினிக் குற்றங்கள், பாதாள உலகக் கோஷ்டியினருக்கிடையிலான  மோதல்கள், போதைப் பொருள் வர்த்தகமும், பாவனைககள், கடத்தல்ககள், விழுமியங்களைகள், சிறந்த வழிகாட்டல்களையும் முன்வைக்க முடியாமை  என  எண்ணிலடங்கா சமூகப்  பிரச்சினைகளுக்கு  இடமளிப்பதாயுள்ளது.

தனிநபர், குடும்பம் ,சூழல் ,சமூகங்களினதும், பிரதேசங்களினதும் சமூக, பொருளாதார, குடும்ப, ஆன்மிக, சூழலியல் சார் விடயங்களிலும் பிரச்சினைகளையும் தாக்கத்தையும் செலுத்தி சமூகப் பிரச்சினைகளின் வடிவமாக ஒரு உளவியல் போர் தமிழ் சமூகத்திடம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இது  சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவில்லை.

உடல் உள பாதிப்புக்களை ஏற்படுத்துவதும் சமூகப் பிரச்சினைகளைத் தோற்று விப்பதுமாக  நுகரப்படும்  சாதி, மத, வர்க்க, பேதமின்றி எல்லாத் தரப்பினரையும் உடல், உள, குடும்ப, சமூக, பொருளாதார, ஆன்மிக,  சூழலியல்சார் பாதிப்புக்களையும் போர் உருவாக்கியிருக்கிறது என்றால் மிகையாகாது. போரினால் பாதிக்கப்பட்டோர், உயிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் , காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாகப் பொறுப்புக்கூற வேண்டிய கடமை அரசுக்கு இருக்க வேண்டும். இதனை கேட்கும் உரிமை பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உண்டு. போரிலே தப்பியவர்களுக்கு அதன் உண்மைகளை வெளிக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு  உள்ளது.

தமிழினத்தின் இருப்பை அழிப்பதிலேயே காலங்காலமாய் குறியாயிருந்த சிங்கள தேசத்தின் படைகள் அரிசிக் கஞ்சிக்கா காத்திருந்த பச்சிலம் பலகர், சிறுவர் முதல் நடைதளர்ந்தவர் வரை சிறிலங்கா படைகள் இலக்குவைத்து  நடத்திய தாக்குதல்களை வார்த்தைகளால் வரையறுக்க முடியாது. கொலைகள், அழித்தல்கள், அடிமைப்படுத்துதல்கள், கடத்தல்கள், சிறைப்பிடித்தல்கள், உளவியல் துன்புறுத்தல்கள், பாலியல் வன்புணர்வுகள், வலிந்து காணாமல்போகச் செய்தல்கள், இன அடையாளங்களை அழித்தல்கள் என அனைத்துப் போர்க்குற்றங்களும் போர் நடந்த காலத்தில் மட்டும் அல்ல, போர் முடிந்த பிறகும் விடுதலைப்புலிகள் இயக்கமே அழிக்கப்பட்டுவிட்டன என மார்தட்டிக்கொள்ளும் சிங்களப் பேரினவாதம் தமிழின அழிப்பில் மேலும் தீவிரம் காட்டி வருகிறது.

எமது சமூகமானது ஒரு நீண்ட போருக்கு முகம் கொடுத்துள்ளது. அது ஆயுதப் போர் மட்டுமல்ல. பொருளாதார, மற்றும் கலாசாரக் கூறுகளையும் உள்ளடக்கியது. இதனால் இங்குள்ள பலரும் உளரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை மறுக்க முடியாது.  உலகில் இனப்படுகொலை நடந்த வேவ் வேறு நாடுகளில் மக்கள் கூட்டாக எவ்வாறு இதனை எதிர்கொண்டார்கள் தொடர்ந்து எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதனையும் கற்றுக் கொண்டு எமது  தமிழர்  தாயகத்துக்கு ஏற்ற மாதிரியான மக்கள் எழுச்சிக்கான திட்ட வரைவுகளை  வரைந்து செயற்பட வேண்டும்.  தமிழர்கள் அனைவரும் ஒருமித்து ஒட்டு மொத்த தமிழர் அரசியல் தொடர்பில் அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்வது சாலச் சிறந்ததாகும். 12 வருடங்கள் கடந்த நிலையிலும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் காயங்களைக் கூடகுணமாக்க முடியவில்லை என்பது பெரும் இடைவெளி.

ஈழதேசத்தில் மனிதாபிமானமற்ற கொடிய யுத்த முள்ளிவாய்க்கால் பேரழிவின் இனப்படுகொலை நடந்து 12வருடங்கள் கடக்கும் இந்த சூழ்நிலையில் தமிழர் தரப்பு நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தல் தீபம் ஏற்றுதல், மலரஞ்சலி, உணர்ச்சி உரைகளையும் தாண்டி அந்த நாளில் என்ன செய்யலாம் என்பதையும் ஒரு தேசமாக, தமிழ்த் தேசிய இனமாக சிந்திக்க வேண்டும்.  2009-,ல் போர் நடந்த காலத்தில் நடந்த குற்றங்கள், போர்க் குற்றங்கள் குறித்து மட்டுமே பேசப்படுகிறது. அதற்கும் முன்பு அதற்கு பின்பும் இன்று வரையிலும் தொடரும் இனப் படுகொலை இன அழிப்பு , இன ஒடுக்குமுறை  குறித்து  உலக  அரங்கில்  நாம்  பேச  வேண்டும்.

அவலங்களும் அழிவுகளுமே வாழ்வாகிப்போனாலும் நாளை நமக்குண்டு என்ற நம்பிக்கையில் எழுந்து நடக்கின்றோம். அவலக்குரல் எழுப்பிய எங்கள் உறவுகளின் குரல் நியாயம் கிடைக்காமல் ஓய்ந்துபோகாது. உலகில் எந்தவொரு தேசிய இனமும் தனது விடுதலைப் போராட்டத்தில் சந்தித்திராத வெங்கொடுமைகளையும் பேரிழப்புக்களையும்  சந்தித்துள்ளோம். நடந்து முடிந்த பேரவலத்தின் விளைவுகளை இனியாவது கூட்டாக எதிர்கொள்ளல் வேண்டும். இதிலிருந்து கூடநாங்கள் கூட்டாக மீள எழவில்லை   எனில் வரலாறு ஒரு போதும் எம்மை மன்னிக்காது.

  • நிலவன்.

கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam