உலகம் செய்திகள்

இந்தோனேசிய நிலநடுக்கம்: இடிபாடுகளில் இருந்து 6 வயது சிறுவன் உயிருடன் மீட்பு

24 Nov 2022

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் கடந்த திங்கட்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தினால், வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட பல கட்டிங்கள் இடிந்து விழுந்தன. இதில் 162 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 700-க்கும் கூடுதலானோர் காயம் அடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து நடந்தது. அந்த வகையில் நேற்று காலை இடிபாடுகளில் இருந்து மேலும் 90 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், பலி எண்ணிக்கை 252 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் தற்போது இந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் பலர் குழந்தைகள். மேலும் 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

இந்த நிலையில், இந்தோனேசிய நிலநடுக்க பகுதியில் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது. இதில், சியாஞ்சூர் பகுதியில் குகநாங் துணை மாவட்டத்தில், நக்ராக் கிராமத்தில் நடந்த தேடுதல் பணியில், நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவனை மீட்பு பணி உயிருடன் மீட்டது.

இந்த இடிபாடுகளில் 2 நாட்களாக சிக்கியிருந்த அஜ்கா மவுலானா மாலிக் என்ற அந்த சிறுவனை இந்தோனேசிய தேசிய பேரிடர் மேலாண் கழகம் மீட்டு உள்ளது.

எனினும், இந்த நிலநடுக்கத்தில் சிறுவனின் பாட்டி உயிரிழந்து விட்டார். அவரது உடல் அருகிலேயே சிறுவன் கிடைத்துள்ளார். சிறுவனின் பெற்றோரின் உடல்கள் முன்பே மீட்கப்பட்டு இருந்தன. இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது.

இதனால், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களின் உறவினர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam