இலங்கை செய்திகள்

இந்தியாவிலிருந்து 9,509 அகதிகள் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக பிரதமர் தகவல்

09 Aug 2018

கடந்த 2010 ம் ஆண்டு முதல் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில்  இந்தியாவிலிருந்து 9,509 அகதிகள் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘2010ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையில், இந்தியாவிலிருந்து 9509 இலங்கை அகதிகள், நாடு திரும்பியுள்ளனர். மேலும், 3815 பேர் நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக இந்திய அரசாங்கத்தின் ஊடாக எமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அகதிகள் தம்முடன் எடுத்து வரவேண்டிய பொருட்களை கடல் மார்க்கமாக கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய இந்திய அரசாங்கம் தயாராகவுள்ளது. இலங்கை அதிகளுக்கு இந்தியாவில் பிறந்த குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ், பிரஜாவுரிமை சான்றிதழ், போக்குவரத்து சான்றிதழ் போன்ற ஆவணங்களைப் பெற்றுக் கொடுக்க சென்னையிலுள்ள உப இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடு திரும்புபவர்களுக்கு காணி, வீடு, வாழ்வாதார உதவிகள், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைளைத் தொடர்வது உள்ளிட்ட தேவைகள் எந்தவித தடையும் இன்றிப் பெற்றுக் கொடுப்பதற்கு மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமயவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கைக்கு நாடு திரும்பி உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படாத நபர்கள் குறித்து அறிக்கையொன்றை நான் அதிகாரிகளிடம் கோருகின்றேன். மன்னார், வவுனியா பிரதேசங்களில் வீடுகளை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்’ என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்