இலங்கை செய்திகள்

இதயம் சின்னத்தை அனுமதித்தால் ரணிலுக்கு தேசியப்பட்டியல் ஆசனம் - சஜித்

13 Feb 2020

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்குவதற்காக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணி நேற்று தேர்தல்கள் செயலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்சிக்குள் இருக்கும் பிணக்குகளை தீர்த்து ‘இதயம்’ சின்னத்தின் கீழ் போட்டியிட ஒப்புக் கொண்டால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்குவதாக சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளதாக கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனவே நாளை இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போது இந்த விடயம் குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சின்னம் தொடர்பான முரண்பாடுகள் வலுப்பெற்றுள்ளன. ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான உறுப்பினர்கள் யானை சின்னத்தின் கீழ் மட்டுமே போட்டியிடுவார்கள் என்றும் சஜித் தரப்பினர் ரணில் ஆதரவு உறுப்பினார்கள் இதய சின்னத்தின் கீழ் வரவிருக்கும் பொதுத் தேர்தல்களில் போட்டியிடுவார்கள் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் ரணில் விக்ரமசிங்க அல்லது அவரது ஆதரவு உறுப்பினர்கள் எவரும் யானை சின்னத்தைத் தவிர வேறு எந்த போட்டிகளிலும் போட்டியிடமாட்டார்கள். மேலும் இதய சின்னத்தின் கீழ் பதிவுசெய்த உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து தீர்மானிப்பதாக ரணிலுக்கு நெருக்கமான மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

இருப்பினும், புதிய சின்னத்தில் போட்டியிடுவது உறுதி என்றும், ரணில் தரப்பு ஒப்புக் கொள்ளாவிட்டால் அவரும் அவரது உறுப்பினர்கள் இல்லாமல் தாம் தனித்து போட்டியிடுவோம் என்றும் சஜித் தரப்பினர் கூறியுள்ளனர்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த யாரும் இப்போது ரணிலின் கீழ் போட்டியிட விரும்பவில்லை. சஜித்தின் முன்மொழிவுக்கு அவர் உடன்படவில்லை என்றால் அவர் தனிமைப்படுத்தப்படுவார் என சஜித் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இவர்களுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சியை ரணில் விக்ரமசிங்க தனியாக வழிநடத்துவதற்கு வழிவகுக்கும் என கட்சியின் மூத்த உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்