இந்தியா செய்திகள்

ஆறுமுகசாமி விசாரணைக்கு தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு

12 Feb 2019

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணத்தின் மர்மம் குறித்து விசாரிக்க ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, இந்த விசாரணை ஆணையம் பலருக்கு சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடை கேட்டும், விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:-
ஜெயலலிதா மரணமடைந்து 9 மாதங்களுக்கு பின்னர்தான், அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என்று கூறி விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையம் கேட்கும் விளக்கங்களை எங்கள் ஆஸ்பத்திரி நிர்வாகம் உடனுக்குடன் அளித்து வருகிறது.

இ.சி.ஜி., எக்ஸ்ரே உள்ளிட்ட அறிக்கைகளும் ஏராளமாக தாக்கல் செய்யப்பட்டன. எங்கள் ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள், தொழில்நுட்ப ஊழியர்கள் என்று பலர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஆனால், இந்த விசாரணை ஆணையம் தேவையில்லாத கேள்விகளை எல்லாம் கேட்டு, எங்கள் ஆஸ்பத்திரி மீதுள்ள நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது. மறைந்த முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு 1984-ம் ஆண்டு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்களை கேட்கிறது.

எனவே, இந்த ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தினால், ஆஸ்பத்திரியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். அதனால், ஆணையம் அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யவேண்டும். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக 21 துறைகளை சேர்ந்த தன்னிச்சையான டாக்டர்கள் குழு அமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் துரைசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், “நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதாவை ஆஸ்பத்திரிக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி அழைத்து செல்ல வேண்டிய சூழ்நிலை, சந்தர்ப்பம் மற்றும் அவர் இறக்கும்வரை வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து தான் விசாரிக்க முடியும்.

ஜெயலலிதாவுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதா? என்பது குறித்து விசாரிக்க உத்தரவிடவில்லை. ஆனால், குற்ற வழக்குகளை நீதிமன்றம் விசாரிப்பதுபோல இந்த ஆணையம் விசாரிக்கிறது. அதாவது, மருத்துவ சிகிச்சையில் குறைபாடுகள் இருப்பது போன்ற கோணத்தில் இந்த விசாரணை ஆணையம் விசாரிக்கிறது” என்று வாதிட்டார்.

அப்போது ஆறுமுகசாமி ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “அப்பல்லோ ஆஸ்பத்திரி தரப்பின் விளக்கத்தை அளிக்க விசாரணை ஆணையம் பலமுறை வாய்ப்பு அளித்துள்ளது” என்று கூறினார்.

இதையடுத்து, இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனுவை வருகிற 15-ந் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கும், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், “இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்த ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்றார். ஆனால், தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்