06 Aug 2022
ஆப்கானிஸ்தான் களநிலவரம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் தலீபான்களால் கடத்தப்பட்டு பின் விடுவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் உள்ள வியான் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிக்கையாளர் அனஸ் மல்லிக் என்பவர் ஆப்கானிஸ்தானில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் தலீபான்களால் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இப்போது ஆப்கானிஸ்தான் காபுலில், மல்லிக் பாதுகாப்பாக பத்திரமாக உள்ளார் என்பதை பாகிஸ்தான் தூதர் உறுதிப்படுத்தி உள்ளார்.
அல்கொய்தா அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்ட குறித்து செய்திகளை சேகரிக்க சென்றார்.இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு முதல் பத்திரிக்கையாளர் மல்லிக் கனாமல் போனதாக தகவல் வெளியானது. இரவு முதல் அவரை காணவில்லை என்று பரவலாக பேசப்பட்டது.
ஆப்கானிஸ்தான் சென்ற அவரை தலீபான்கள் கடத்திச் சென்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அவருடைய நண்பர்கள் இந்த தகவலை தெரிவித்தனர். அவருடைய மொபைல் போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாகவும் அவர் எங்கு சென்றார் என்பதை தெரியவில்லை என்றும் கூறினர்.
இதனை குறித்து விசாரிக்க பாகிஸ்தான் தூதரகம் தலீபான் அரசுடன் விசாரணை செய்தது. அதன் பின்னர் வெள்ளிக்கிழமை அன்று அவருடைய இருப்பிடத்தை கண்டறிந்தனர். அவர் தலைநகர் காபுலில் பத்திரமாக இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவருடன் தூதரகம் தொடர்பில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, விடுவிக்கப்பட்ட பிறகு, அனஸ் மல்லிக் தலிபான்களின் காவலில் இருந்தபோது தான் அனுபவித்த துயரங்களை நினைவு கூர்ந்தார்.
மல்லிக் கூறியதாவது, "ஆகஸ்ட் 3 ஆம் தேதி நான் காபூலுக்கு வந்தடைந்தேன். காபூலில் இருந்து பத்திரிகையாளர் என்பவதற்கு தேவையான அனைத்து அங்கீகாரம் மற்றும் நற்சான்றிதழ்கள் என்னிடம் இருந்தன. அப்போது அங்கிருந்த சில தலிபான்களால் காரில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டு கடத்தப்பட்டேன், எனது செல்போன் பறிக்கப்பட்டது.
பின்னர் நானும் எனது கார் ஓட்டுனர் உட்பட்ட குழுவினரும் இரக்கமின்றி தாக்கப்பட்டோம். எங்களை கைவிலங்கிடப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, தலிபான்களால் விசாரிக்கப்பட்டோம்.
பின், நான் ஒரு அறைக்கு மாற்றப்பட்டேன், மொழிபெயர்ப்பாளர் வந்தவுடன் நான் சுதந்திரமாக நடக்க அனுமதிக்கப்படுவேன் என்று என்னிடம் கூறப்பட்டது. ஆகஸ்ட் 5 காலையில் என்னை விடுவித்தனர்" என்று கூறினார்.
அவருடைய கார் ஓட்டுநர் மற்றும் உள்ளூர் தயாரிப்பாளர் ஆகியோர் இன்னும் தலீபான்களிடம் தான் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரியவில்லை.
இதே போன்ற சம்பவத்தில் 2021 ஆம் ஆண்டு, புலிட்சர் விருது வென்ற இந்திய பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக், கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல பல்வேறு சம்பவங்கள் அங்கு நடந்து வருகின்றன. இந்தியாவை சேர்ந்த டேனிஷ் சித்திக், ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற அப்போதைய கலவரங்களை குறித்து செய்தி சேகரிக்க சென்றபோது கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தான் களநிலவரம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் தலீபான்களால் கடத்தப்பட்டு பின் விடுவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.