இலங்கை செய்திகள்

ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமென இந்தியா விரும்புவதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு

12 Feb 2019

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில் இந்த வருடத்தில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டுமென இந்தியா விரும்புவதாகத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்  ஜீ.எல்.பீரிஸ் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான யோசனையொன்று கொண்டுவரப்பட்டால் அதற்கு முழுமையான ஆதரவு வழங்குவோமென அறிவித்துள்ளார்

பத்தரமுல்​ல - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும்  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணி வைத்தாலும், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை பொதுஜன பெரமுனவே தீர்மானிக்கும் என்றும் அவர் கூறினார். 

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கின்ற போதிலும், அது வரையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் தொடர்ந்தால், நாடு முழுமையாக நாசம் செய்யப்படும் என்று தெரிவித்த அவர், ஆகவே, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு யோசனையொன்று கொண்டுவரப்பட்டால், அதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றார்.  

மேலும், புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளுக்காக, வரவு-செலவுத் திட்டத்தில் அரசாங்கம் நிதி ஒதுக்கக் ​கூடாது என்று தெரிவித்த அவர், தமது ஆட்சியின்போது, 19ஆம் திருத்த சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவோம் எனவும் கூறினார். 

இதேவேளை, பாதாள உலகக் குழுவொன்றின் தலைவர் மாகந்துரே மதுஷ், டுபாய் நாட்டில் செய்த குற்றத்துக்கே, கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்த அவர், அவருக்கெதிரான நடவடிக்கைகளை, அந்நாட்டு நீதிமன்றமே எடுக்கும் என்றார். 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்