உலகம் செய்திகள்

அவுஸ்திரேலியாவில் மனுஸ் மற்றும் நவுறு தீவில் தடுப்பில் உள்ள ஈழ அகதிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அமெரிக்காவில் குடியமர்த்தப்படவுள்ளனர்

28 Jul 2017

அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரிய நிலையில் மனுஸ் மற்றும் நவுறு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழம் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அமெரிக்காவில் குடியமர்த்தப்படவுள்ளனர். இந்நிலையில், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் புகலிட கோரிக்கையாளர்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவார்கள் என அவுஸ்திரேலியா நாட்டு குடிவரவு அமைச்சர் பீட்டர் டத்தொன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், புகலிடக் கோரிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் குறித்த அகதிகள் தடுப்பு முகாம் மூடப்படவுள்ளதாகவும் பீட்டர் டத்தொன் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அமெரிக்காவில் குடியமர்த்தும் திட்டத்திற்கு தடுப்பில் உள்ள புகலிட கோரிக்கையாளர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மனுஸ் தீவிற்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க நாட்டு அதிகாரிகள் திட்டமிட்ட நாட்களுக்கு முன்னரே அந்த தீவை விட்டு கடந்த வாரம் வெளியேறியிருந்தனர். இதன் காரணமாக தடுப்பில் உள்ள புகலிட கோரிக்கையாளர்களை அமெரிக்காவில் குடியேற்றுவது தொடர்பில் சந்தேகம் நிலவி வந்தமையும் குறிப்படத்தக்கது. இதேவேளை, அவுஸ்திரேலியாவில் தடுப்பில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களில் 250க்கும் மேற்பட்டவர்கள் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்