இலங்கை செய்திகள்

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஒரு நாள் விசேட விவாதம் ஒன்றை நடத்த தீர்மானம்

10 Oct 2018

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தனி ஒரு நாள் விசேட விவாதம் ஒன்றை நடத்தச் செய்வதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கும் சூழ்நிலையில், அவசர, அவசியப் பிரச்சினையாக மாறியிருக்கும் இவ்விவகாரம் தொடர்பில், அரசினதும் நாடாளுமன்றத்தினதும் கவனத்தை ஈர்ப்பதற்காக சபை ஒத்திவைப்பு வேளையில் விசேட பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவது குறித்து ஆரம்பத்தில் கூட்டமைப்பு திட்டமிட்டதாகத் தெரிகின்றது.

இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க எம்.பியுடன் உரையாடினார் என்றும், தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினையின் அவசர நிலைமை கருதி அந்தப் பிரச்சினையில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக அந்த விசேட விவாத முயற்சிக்கு ஜே.வி.பியின் ஆதரவை அவர் கோரினார் என்றும் தெரிகின்றது.

இந்தப் பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி, சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையாக அல்லாமல், இவ்விடயத்துக்குத் தனியாக ஒரு நாள் விவாதத்தைக் கோரலாம் என்றும், அந்த முயற்சிக்குத் தாங்கள் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் தருவதாகவும் அநுரகுமார திஸநாயக்க எம்.பி., பதிலளித்திருக்கின்றார்.

அதேசமயம், தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தை ஒட்டி, தனி ஒரு நாள் நாடாளுமன்ற விவாதத்தை நடத்தும் கோரிக்கையைத் தாமும் ஆதரிக்கின்றார் என்றும், அதற்கான ஆதரவுக் கடிதத்தைத் தாமும் எழுத்தில் வழங்குவார் என்றும், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய மலையக மற்றும் தமிழ் பேசும் எம்.பிக்களின் எழுத்து மூல ஆதரவையும் இதற்குப் பெற முயற்சி எடுக்கவேண்டும் என்றும் தமிழ்க் கூட்டமைப்புத் தரப்புக்கு யாழ். மாவட்ட எம்.பியான ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரியப்படுத்தியுள்ளார் என்றும் அறிய முடிகின்றது.

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்