உலகம் செய்திகள்

அமெரிக்க ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 6 பேர் மாயம்

06 Dec 2018

ஜப்பான் கடற்கரையில் உள்ள எண்ணைய் நிரப்பும் நிலையத்துக்கு சென்று எண்ணைய் நிரப்பிக் கொண்டு புறப்பட்ட அமெரிக்க போர் விமானங்களான எப்-18 ஃபைட்டர், சி -130 டேங்கர் ஆகிய இரண்டும் விபத்துக்குள்ளாகின. ஜப்பான் கடற்கரையில் சுமார் 200 மைல் தொலைவில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு இந்த விபத்து நடைபெற்றதாக ஜப்பானில் உள்ள அமெரிக்க கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இந்த விபத்துச் சம்பவம் பற்றி கூறியதாவது:- “ தெற்கு ஜப்பானின் ல்வாகுனி விமான தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானங்கள் விபத்துக்குள்ளாகின. சி -130 போர் விமானம் 5 பேருடனும், எப்-18 விமானம் இரண்டு பேருடனும் சென்றது. இதில், ஒரு விமானி மட்டும் மீட்கப்பட்டுள்ளார். ஏனைய 6 பேரின் நிலைமை குறித்து தகவல் எதுவும் இல்லை. அவர்களை மீட்கும் பணியில், ஜப்பான் கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  மீட்பு பணிகளில் உடனடியாக ஈடுபட்ட ஜப்பான் பாதுகாப்பு படையினருக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். வழக்கமான பயற்சியின் போது இந்த விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது. விபத்துக்கான சூழல் மற்றும் காரணம் பற்றி விசாரணை நடக்கிறது” என்றார். 

ஜப்பானில் அமெரிக்க ராணுவத்தின் 50 ஆயிரம் வீரர்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். இது போன்ற விபத்து சம்பவங்கள் நடைபெறுவது வழக்கத்திற்கு மாறான ஒன்று அல்ல எனக் கூறப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம், அமெரிக்க கடற்படை போர் விமானம், ஜப்பானின் தெற்கு தீவுப்பகுதியான ஒகின்வா பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது, அதிருஷ்டவசமாக விமான சிப்பந்திகள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

அடிக்கடி விபத்துக்கள்  நடைபெறுவது நெருங்கிய பாதுகாப்பு கூட்டாளியாக திகழும் ஜப்பான் - அமெரிக்கா இடையே சில கசப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது. அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதாலும் பள்ளி வளாகங்கள் உள்பட பொது இடங்களில் விபத்துக்குள்ளாகும் போர் விமானங்களின் பாகங்கள் சிதறுண்டு விழுவதாலும் அதிருப்தி அடையும்  ஜப்பான் மக்கள், அவ்வப்போது போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். 


 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்